மரணம் 
செய்திகள்

பூந்தமல்லி பணிமனையில் பஸ்சில் இருந்து விழுந்து ஊழியர் பலி

பூந்தமல்லி பணிமனையில் ஒரு ஊழியர் பணியின் போது தவறி விழுந்து இறந்து போன சம்பவம் போக்குவரத்து பணிமனை ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பூந்தமல்லி:

பூந்தமல்லியில் அரசு பஸ் பணிமனை இயங்கி வருகிறது. இங்கு தினந்தோறும் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்த பணிமனையில் அரசு பஸ்களை பராமரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இன்று அதிகாலை இங்கு பணியில் ஈடுபட்ட வேலூர் தக்கோலத்தை சேர்ந்த வெங்கடேசன் (56)என்ற ஊழியர் அரசு பஸ்சின் முன் பகுதியில் ஸ்டிக்கர் ஒட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை கண்டதும் சக ஊழியர்கள் அவரை மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு வடபழனி பணிமனையில் அரசு பஸ் சுவரின் மீது மோதியதில் அரசு ஊழியர்கள் 2 பேர் இறந்தனர். 4 பேர் காயம் அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து தற்போது பூந்தமல்லி பணிமனையில் ஒரு ஊழியர் பணியின் போது தவறி விழுந்து இறந்து போன சம்பவம் போக்குவரத்து பணிமனை ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.