திருச்சூர் பூரம் விழாவில் யானைகளின் அணிவகுப்பு 
செய்திகள்

திருச்சூர் பூரம் திருவிழாவில் யானைகள் அணிவகுப்பு - லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

திருச்சூர் பூரம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான யானைகள் அணிவகுப்பு நேற்று நடந்தது. தெக்கேபரம்பு திருவம்பாடி மைதானத்தில் 60 யானைகள் அணிவகுக்க ஊர்வலம் நடந்தது.

மாலை மலர்

திருவனந்தபுரம்:

கடவுளின் நாடு என்று வர்ணிக்கப்படும் கேரளாவில் நடைபெறும் விழாக்களில் திருச்சூர் பூரம் திருவிழா பிரசித்திப் பெற்றது.

திருச்சூரில் உள்ள வடக்கன் நாதர் மகாதேவர் கோவிலில் நடைபெறும் இந்த விழா 1798-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. கேரளாவில் கொச்சி சமஸ்தானத்தை ஆண்ட ராஜா ராமவர்மா காலத்தில் இந்த விழா தொடங்கியது.

பூரம் நட்சத்திரத்தில் விஷ்ணுவை யானைகள் அணிவகுக்க, பஞ்சவாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்துச் செல்லும் நிகழ்ச்சியே பூரம் விழாவாக கொண்டாடப்பட்டது.

இந்த ஆண்டுக்கான திருச்சூர் பூரம் விழா கடந்த வாரம் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான யானைகள் அணிவகுப்பு நேற்று நடந்தது. தெக்கேபரம்பு திருவம்பாடி மைதானத்தில் 60 யானைகள் அணிவகுக்க ஊர்வலம் நடந்தது.

ஒவ்வொரு யானைகளும் நெற்றிபட்டம் கட்டி வெள்ளி அணிகலன்கள் அணிந்து ஒய்யாரமாக நடந்து செல்ல, அவற்றிற்கு முன்புறம் துந்துபி, பஞ்சவாத்தியம், பாண்டிமேளம் இசைத்து செல்ல விஷ்ணு ஊர்வலம் நடந்தது.

யானைகள் அணிவகுப்பு, வாத்தியங்களின் இசையை கேட்க நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்சூரில் குவிந்திருந்தனர்.

பாரம்பரிய விழாவான இதனை காண வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வந்திருந்தனர். அவர்கள் யானைகளின் கூட்டத்தை படம் எடுத்தும், பஞ்ச வாத்தியங்களின் இசையை ஒலிப்பதிவு செய்தும் மகிழ்ந்தனர்.

ஆஸ்கர் விருது பெற்ற கேரள ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி இந்த ஆண்டு நடைபெற்ற திருச்சூர் பூரம் விழாவில் இசைக்கப்பட்ட வாத்தியக்கருவிகளின் ஒலியை நேரில் பதிவு செய்தார்.

இதற்காக வெளிநாடுகளில் இருந்து சவுண்ட் என்ஜினீயர்களை அழைத்து வந்திருந்தார். 100 இடங்களில் எலெக்ட்ரானிக் கருவிகள் மூலம் இந்த இசை ஒலிப்பதிவு செய்யப்பட்டது.

திருச்சூரில் நடைபெறும் பூரம் விழாவின் முக்கிய நிகழ்வான போட்டி வாண வேடிக்கை இன்றிரவு நடக்கிறது. இதற்கு மத்திய அரசின் விசே‌ஷ அனுமதியை விழாக்குழுவினர் பெற்றுள்ளனர்.

இன்று இரவு பலத்த பாதுகாப்புடன் போட்டி வாண வேடிக்கை நடக்கிறது. அத்துடன் விழா நிறைவு பெறுகிறது.