செய்திகள்

பம்பை ஆற்றில் சுவாமி ஐயப்பனுக்கு ஆராட்டு - யானை மிரண்டு ஓடியதால் 10 பேர் காயம்

பம்பை ஆற்றில் சுவாமி ஐய்யப்பனுக்கு ஆராட்டு வைபவம் நேற்று நடந்தது. அப்போது நடந்த ஊர்வலத்தின்போது ஐயப்பன்சிலையை சுமந்துவந்த யானை மிரண்டு ஓடியதால் 10 பக்தர்கள் காயம் அடைந்தனர்.

சபரிமலை:

சபரிமலை ஐயப்பன்கோவிலில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பங்குனி உத்திர தினமான நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியாக பம்பை ஆற்றில் சுவாமி ஐய்யப்பனுக்கு ஆராட்டு வைபவம் நடந்தது. இதையொட்டி சன்னிதானத்தில் இருந்து காலை 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானை மீது சுவாமி ஐயப்பன்சிலையை வைத்து ஊர்வலம் தொடங்கியது.

ஊர்வலம் சென்று கொண்டிருந்தபோது ஐயப்பன்சிலையை சுமந்து சென்ற யானை திடீரென மிரண்டது. உடனடியாக யானை மீது இருந்த சிலை கீழே இருந்தவர்களிடம் கொடுக்கப்பட்டது. பூசாரியும் யானை மீது இருந்து கீழே இறங்கினார்.

ஆனாலும் யானை மிரண்டு ஓடியதில் அந்த பூசாரி உள்பட 10 பக்தர்கள் காயம் அடைந்தனர். மிரண்டு ஓடிய யானையும் ஒரு பள்ளத்தில் விழுந்து பிளிறியது. பின்னர் அந்த யானை மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த பரபரப்பு முடிவுக்கு வந்தது.

சுவாமி ஐயப்பன்சிலை அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வைத்து மீண்டும் ஊர்வலம் பம்பை ஆற்றை நோக்கி நடைபெற்றது. பகல் 11.30 மணிக்கு பம்பை கணபதி கோவிலுக்கு வந்த ஆராட்டு ஊர்வலத்திற்கு அங்கு திரண்டிருந்த பக்தர்கள் வரவேற்பு அளித்தனர்.

பகல் 12 மணிக்கு சபரிமலை கோவில் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி முன்னிலையில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு ஆராட்டு பலி பூஜைகளை நடத்தினார். #tamilnews