ஊட்டி:
நீலகிரி மாவட்டம் சிங்கார வனப்பகுதியில் உள்ள ஆற்றில் 50 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று சேற்றில் சிக்கி தவித்தது. கடந்த 2 நாட்களாக உயிருக்கு அந்த யானை போராடியது.
அந்த வழியே சென்ற சிலர் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் வனத்துறைக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் வனத்துறையினர் அங்கு வந்து யானையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை.
பின்னர் முதுமலையில் இருந்து 5 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டது. கும்கிகள் உதவியுடன் கயிறு கட்டி சேற்றில் சிக்கிய யானை பத்திரமாக மீட்கப்பட்டது. இருந்தாலும் யானையின் பின் பகுதியில் காயம் ஏற்பட்டிருந்தது.
கால்நடை டாக்டர் மனோகரன் தலைமையிலான குழுவினர் வரவழைக்கப்பட்டனர். டாக்டர் காட்டுயானையை பரிசோதனை செய்தபோது அது கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. காயத்தால் அவதியடைந்த யானைக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி அங்கேயே முகாம் அமைக்கப்பட்டது.
முகாம் அருகே 5 கும்கிகள் நிறுத்தப்பட்டது. டாக்டர் குழுவினர் யானையின் காயத்தை சுத்தப்படுத்தி மருந்து போட்டனர்.
பெரும்பாலும் இவ்வாறு ஆபத்தில் சிக்கும் காட்டுயானைகள் மீட்கப்படும்போது ஆவேசமாக இருக்கும். வனப்பகுதிக்குள் தப்பிச்செல்வதிலேயே குறியாக இருக்கும். ஆனால் இந்த யானை அமைதியாக இருந்தது. கும்கிகளை கண்டு ஓட்டம் பிடிக்கும் யானைகள் மத்தியில் இந்த பெண்யானை கும்கிகளிடம் அன்பாக பழகுகிறது. தனக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் மனோகரனை துதிக்கையால் தொட்டுத்தொட்டு பார்த்து அன்பாக பழகுகிறது.
தனது உயிரை காப்பாற்றிய வன ஊழியர்கள், கும்கிகள், டாக்டரிடம் அன்பாக பழகுவது அவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. காயம் அதிகமாக உள்ளதால் இன்னும் சில நாட்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டு கர்ப்பிணி யானைக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்று டாக்டர் மற்றும் வனத்துறையினர் கூறினர்.