சென்னை:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று பஸ், ரெயில் மறியல் போராட்டம் நடந்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பால கிருஷ்ணன் தலைமையில் தொண்டர்கள் பூங்கா நகர் நிலையத்தில் மின்சார ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற ரெயிலையும், தாம்பரம்- கடற்கரை நோக்கி வந்த ரெயிலையும் மறித்து தண்டவாளத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ரெயில் என்ஜின் மீது ஏறியும், தண்டவாளத்தில் படுத்தும் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பட்டன. 30 நிமிடங்கள் வரை நீடித்த இந்த போராட்டத்தால் மின்சார ரெயில் சேவை இருமார்க்கமும் பாதிக்கப்பட்டன.
ஆங்காங்கே ரெயில்கள் நிறுத்தப்பட்டன. மறியலில் ஈடுபட்ட கே.பாலகிருஷ்ணன் உள்பட 300 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதே போல திராவிடர் கழகம் சார்பில் எழும்பூர் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. தாம்பரம்-கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரெயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேரை கைது செய்தனர். #tamilnews