செய்திகள்

திண்டுக்கல்லில் மின்சாரம் தாக்கி பெண் பலி

திண்டுக்கல்லில் இன்று மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக உயிரிழந்தார். காப்பாற்ற முயன்ற தந்தை-மகன் காயம் அடைந்தனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் பாறைக்குளம் என்.எஸ்.கே.நகரைச் சேர்ந்தவர் கருப்பையா (வயது 43). தனியார் கம்பெனியில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஆரோக்கியம்மாள் (36). இவர்களுக்கு மாசிலா மணி (15), ஆறுமுகம் (13) என்ற மகன்கள் உள்ளனர்.

இன்று காலை ஆரோக்கியம்மாள் குளித்து விட்டு துணிகளை காய போட்டுக் கொண்டு இருந்தார். அப்போது மின்சார வயர் அறுந்து தொங்கியதை கவனிக்காததால் அதில் கைப்பட்டு தூக்கி வீசப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக கீழே விழுந்து உயிரிழந்தார்.

வீட்டுக்குள் இருந்த கருப்பையா தன் மனைவியின் சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்தார். அப்போது அவரது உடலிலும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். பின்னர் அவரது மகன் ஆறுமுகமும் ஓடி வந்து தனது தந்தையை பிடிக்க முயன்ற போது அவரது உடலிலும் மின்சாரம் பாய்ந்தது.

2 பேரும் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து நகர் தெற்கு போலீசார் வழக்குபதிவு செய்து இறந்த ஆரோக்கியம்மாள் உடலை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.