செய்திகள்

பூதப்பாண்டி அருகே மின் வேலியில் சிக்கி தொழிலாளி பலி

பூதப்பாண்டி அருகே வாழை தோட்டத்து மின்வேலியில் சிக்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில்:

பூதப்பாண்டி அருகே உள்ள ஞாலம் இந்திரா காலனியை சேர்ந்தவர் தர்மர் (வயது 36). இவரது மனைவி நிவேதா. இந்த தம்பதிக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.

தர்மர் செங்கல்சூளை தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு அவர் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று நாய் குறைக்கும் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.

இதனால் தர்மரும் அவரது மனைவி நிவேதாவும் வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தனர். நாய் குறைக்கும் சத்தம் அந்த பகுதியில் உள்ள ஒரு வாழைத்தோட்டத்தில் இருந்து கேட்டதால் அவர்கள் இருவரும் அங்கு சென்றனர்.

அப்போது அந்த வாழைத் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியை எதிர்பாராதவிதமாக தர்மர் தொட்டுவிட்டார். இதனால் அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தனது கண் முன்பு கணவருக்கு நேர்ந்த கதியை பார்த்து மனைவி நிவேதா கூச்சலிட்டார்.

அவரது கூச்சல் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு வந்தனர். அதன்பிறகு தர்மர் உடலை அவர்கள் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த சம்பவம் பற்றி பூதப்பாண்டி போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

பூதப்பாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த பகுதியில் காட்டுப்பன்றியிடமிருந்து வாழை பயிரை காப்பாற்ற திருட்டுத்தனமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி தர்மர் இறந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக அந்த தோட்டத்து உரிமையாளர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.