சென்னை:
சென்னை மாநகர் போக்குவரத்துக்கழகத்தின் மூலம் மின்சார பஸ் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது.
உலகம் முழுவதும் எரிபொருளை சேமிக்க மின்சாரம் மூலமும், இயற்கை எரிவாயு மூலமும் வாகனங்களை இயக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மின்சாரத்தை அதிக அளவில் சார்ஜ் செய்து வைத்துக்கொள்ளும் நவீன பேட்டரியுடன் கூடிய மின்சார பஸ் மற்றும் வாகனங்களை உருவாக்கும் ஒரு நிறுவனம் இங்கிலாந்து நாட்டில் உள்ளது. இந்த நிறுவனத்தை அசோக் லேலாண்ட் நிறுவனம் வாங்கி உள்ளது.
தற்போது அங்கு நவீன பேட்டரியுடன் கூடிய மின்சார பஸ் மற்றும் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நவீன பேட்டரியுடன் கூடிய மின்சார பஸ்களை இயக்குவதன் மூலம் செலவினம் குறைவாகும் என்றும், இதை செயல்படுத்த தமிழக அரசு தயாராக இருக்கும் பட்சத்தில் நவீன பேட்டரியுடன் கூடிய மாதிரி மின்சார பஸ்சை இயக்கி காண்பிக்க தயாராக இருப்பதாகவும் தமிழக அரசை, அசோக் லேலாண்ட் நிறுவனம் கேட்டுக்கொண்டது. இதைதொடர்ந்து, மாதிரி பஸ்சை இயக்கி காண்பிக்க தமிழக அரசு கூறியது.
அதன்படி, மாதிரி மின்சார பஸ் சென்னை தலைமை செயலகத்துக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர், இந்த புதிய பஸ் 80 கிலோ மீட்டர் வேகத்தில் சென்னை கடற்கரை சாலையில் சோதனை அடிப்படையில் ஓட்டி காண்பிக்கப்பட்டது. அந்த பஸ்சில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், போக்குவரத்துத்துறை கூடுதல் முதன்மை செயலாளர் டேவிதார் மற்றும் அதிகாரிகள் பயணம் செய்தனர்.
அப்போது, பஸ்சில் உள்ள சிறப்பு வசதிகளை அவர்கள் பார்வையிட்டனர். பஸ்சில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து நிறுவன அதிகாரிகளிடம் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கேட்டறிந்தனர். இதுதொடர்பாக விளக்கம் அளித்த அசோக் லேலாண்ட் நிறுவன அதிகாரிகள், ஒரு முறை பேட்டரியை சார்ஜ் செய்தால் 120 கிலோ மீட்டர் தூரம் வரை பஸ்சை இயக்க முடியும் என்றும், தீ தடுப்பு வசதியுடன் பஸ் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதன்பின்பு அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறும்போது, ‘போக்குவரத்து கழகத்தின் சேவையை மேம்படுத்தும் வகையில் சென்னையில் மின்சார பஸ் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
பொதுமக்களின் வசதிக்கு ஏற்ப சில மாற்றங்களை செய்து சென்னை மாநகர் போக்குவரத்துக்கழகத்தில் மின்சார பஸ்சை பயன்பாட்டிற்கு கொண்டுவர விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார்.