செய்திகள்

பணப் பட்டுவாடா நடந்தால் வருமான வரி சோதனை நடத்தப்படும்: தேர்தல் ஆணையம்

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா நடந்தால் வருமான வரி சோதனை நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாலை மலர்

சென்னை:

ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு கடந்த முறை ரூ.100 கோடி அளவுக்கு பணப்பட்டு வாடா செய்யப்பட்டதால் தேர்தல் ரத்து செய்யப் பட்டது.

எனவே இந்த தடவை பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

என்றாலும் ஆர்.கே.நகர் தொகுதியில் சில வேட்பாளர்கள் பணப்பட்டு வாடாவை தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. சில வேட்பாளர்கள் நூதன முறையில் பரிசுகளை வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தேர்தல் பார்வையாளர்களின் கண்களில் மண்ணை தூவி விட்டு கணக்கச்சிதமாக பணப்பட்டுவாடா நடக்கிறது. இதனால் தேர்தல் ஆணையம் புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்வதை ஆதாரப்பூர்வமாக நாங்கள் கண்டுபிடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பணப்பட்டுவாடா செய்பவர்களின் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தப்படும்.

இவ்வாறு தேர்தல் ஆணைய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.