சென்னை:
பாராளுமன்றத்துக்கு ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தல் அட்டவணை இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கமாக பாராளுமன்ற தேர்தல் 7 அல்லது 8 கட்டங்களாக நடத்தப்படும். இந்த தடவை 9 அல்லது 10 கட்டங்களாக ஓட்டுப்பதிவை நடத்தலாமா? என்று தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது.
மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் மற்றும் மலைப்பகுதி அதிகம் கொண்ட மாநிலங்களில் முதலிலேயே தேர்தல் நடத்தப்படும். பிறகு பாதுகாப்புப் படை வீரர்களை மற்ற மாநிலங்களுக்கு நகர்த்தி தேர்தலை நடத்துவார்கள். இந்த ஆண்டும் அதே மாதிரி ஓட்டுப்பதிவுக்கு திட்டமிடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழ் நாட்டில் முதலில் முதல் கட்ட தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது. இதை வலியுறுத்தி தலைமை தேர்தல் ஆணையத்திடம் கடிதம் அளிக்க அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதற்காக அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள், அமைச் சர்கள், எம்.பி.க்கள், எம்.எல். ஏ.க்களிடம் கையெழுத்து பெறப்பட்டு வருகிறது. அந்த கையெழுத்து படிவங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, கடிதமாக தலைமை தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்படும்.
நாளை (திங்கட்கிழமை) அல்லது ஓரிரு நாட்களில் இந்த கடிதத்தை ஒப்படைக்க ஆளும் அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை உச்சத்தில் இருக்கும். ஏற்கனவே பருவ மழை பொய்த்துள்ள நிலையில் ஏப்ரல், மே மாதங்களில் கடும் வறட்சி உருவாகும். மேலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் பேரபாயமும் உள்ளது. எனவே பாராளுமன்ற தேர்தலை தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக முதல் கட்டமாக நடத்தி முடித்து விட வேண்டும் என்று அந்த கடிதத்தில் வலியுறுத்த அதி.மு.க. தீர்மானித்துள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் மார்ச் மாத இறுதியிலேயே முடிந்து விடும். எனவே தமிழ்நாட்டில் முதல் கட்ட பாராளுமன்ற தேர்தலை நடத்த எந்த இடையூறும் இல்லை என்பதையும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்ட இருப்பதாக அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவர் தெரிவித்தார்.
அந்த அ.தி.மு.க. தலைவர் தொடர்ந்து கூறுகையில், “அ.தி.மு.க. சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள அந்த கடிதத்தில் இன்னும் 10 எம்.பி.க்கள் கையெழுத்திட வேண்டியதுள்ளது. அவர்கள் கையெழுத்து போட்டு முடித்ததும், அந்த கடிதம் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும்” என்றார். அ.தி.மு.க.வின் இந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ElectionCommission #ADMK