செய்திகள்

ஒருங்கிணைப்பாளர்- இணை ஒருங்கிணைப்பாளர் பதவி: ஈ.பி.எஸ்- ஓ.பி.எஸ்-க்கு தேர்தல் கமி‌ஷன் அங்கீகாரம்

ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் கமி‌ஷன் அங்கீகரித்துள்ளது.

மாலை மலர்

சென்னை:

ஜெயலலிதா மரணத்தை அடுத்து அ.தி.மு.க. பொதுக்குழு கூடி சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்வு செய்தது.

இடையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஓ.பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து தனியாக பிரிந்து வந்தார்.

சசிகலா அணியில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி முதல்-அமைச்சர் ஆனார். பின்னர் ஏற்பட்ட பிரச்சினையால் சசிகலா அணியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமியும் வெளியேறினார். சசிகலா ஜெயிலில் இருப்பதால் அவரது அணி டி.டி.வி. தினகரன் தலைமையில் செயல்பட்டு வந்தது.

இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அணியும், ஓ.பன்னீர் செல்வம் அணியும் ஒன்று சேர்ந்தது. அவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் 12-ந் தேதி பொதுக்குழுவை கூட்டினார்கள்.

அதில், பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் பதவி ஒழிக்கப்பட்டது. அதே நேரத்தில் கட்சிக்கு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன.

ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் இந்த தேர்வை அங்கீகரிக்க வேண்டும் என்று தேர்தல் கமி‌ஷனுக்கு முறைப்படி விண்ணப்பித்து இருந்தனர்.

இதற்கிடையே அ.தி. மு.க.வின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. அதை மீட்பதற்கும் இந்த அணியினர் முயற்சித்தனர். தேர்தல் கமி‌ஷன் இதை அங்கீகரித்து இரட்டை இலை சின்னம் எடப்பாடி அணியினருக்கே என்று தீர்ப்பு வழங்கியது. மேலும் எடப்பாடி அணியினர் கட்சியே உண்மையான அ.தி.மு.க. என்றும் அங்கீகரித்தது.

இந்த அங்கீகாரத்தை எதிர்த்து தினகரன் அணியினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் மீண்டும் அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. அ.தி.மு.க. வேட்பாளராக மதுசூதனன் அறிவிக்கப்பட்டார்.

வேட்பாளர் மனு தாக்கல் செய்யும் போது அதில் உள்ள ஏ. பார்ம், பி. பார்ம் ஆகியவற்றில் கட்சி தலைவர் கையெழுத்திட வேண்டும். இதற்கு முன்பு கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா கையெழுத்திட்டு வந்தார்.

இப்போது அந்த பதவி ஒழிக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டு இருந்ததால் அவர்கள் இந்த பாரத்தில் கையெழுத்திட்டு இருந்தனர்.

நேற்று வேட்பு மனு தாக்கல் பரிசீலனை நடந்த போது மதுசூதனனை அ.தி.மு.க. வேட்பாளராக ஏற்க கூடாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டது செல்லாது.

எனவே, அவர்களுடைய கையெழுத்தை கட்சி அங்கீகாரமாக ஏற்க கூடாது. மேலும் இது சம்பந்தமாக வழக்கு நிலுவையில் இருப்பதால் சசிகலாதான் கட்சியின் பொதுச்செயலாளர். அ.தி.மு.க.வின் பழைய விதிகளையே இப்போதும் பின்பற்ற வேண்டும். தேர்தல் கமி‌ஷன் வேறுமாதிரியான முடிவுகளை எடுக்க கூடாது. ஓ.பன்னீர்செல்வம்- எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்தை ஏற்க கூடாது என்று கூறினார்கள்.

ஆனால், தேர்தல் அதிகாரிகள் டி.டி.வி. தினகரன் தரப்பு விவாதத்தை ஏற்க மறுத்து விட்டனர்.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்திட அதிகாரம் உள்ளது என்று கூறி மதுசூதனனை அ.தி.மு.க. வேட்பாளராக ஏற்றுக்கொண்டு அவருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கினார்கள்.

இதன் மூலம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் கமி‌ஷன் அங்கீகரித்துள்ளது.

இது சம்பந்தமாக அ.தி.மு.க. மூத்த வக்கீல் மனோஜ் பாண்டியன் கூறும் போது, ஒருங்கிணைப்பாளர்- இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் விண்ணப்பத்தில் கையெழுத்திட அனுமதிக்க வேண்டும் என்று நாங்கள் ஏற்கனவே தேர்தல் கமி‌ஷனிடம் கேட்டு இருந்தோம்.

அவர்கள் அப்போதே அங்கீகாரம் கொடுத்து விட்டார்கள். அதன் அடிப்படையிலேயே விண்ணப்பத்தில் கையெழுத்திட்டு வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதை தேர்தல் அதிகாரிகள் ஏற்று கொண்டுள்ளனர் என்று கூறினார்.

தேர்தல்துறை அதிகாரி ஒருவர் இதுபற்றி கூறும் போது, தேர்தல் கமி‌ஷன் கீழ்நிலை செயலாளர் ராஜன் ஜெயின் இது சம்பந்தமாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு டிசம்பர் 1-ந் தேதியே கடிதம் அனுப்பி இருந்தார்.

அதில் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் வேட்பு மனு ஆவணத்தில் கையெழுத்திடலாம் என்று குறிப்பிட்டு இருந்தார். அதன் அடிப்படையிலேயே அவர்கள் கையெழுத்திட்டதை ஏற்றுக்கொண்டு இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

கடந்த பொதுக்குழு கூட்டத்தின் போது அ.தி.மு.க. சட்ட விதிகளில் பல மாற்றி அமைக்கப்பட்டன. இதன்படி ஒருங்கிணைப்பாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் பல்வேறு அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அதில், இவர்கள் இருவரும் தேர்தல் கமி‌ஷன் தொடர்பான ஆவணங்கள், அரசு, கோர்ட்டு, வங்கி சம்பந்தமான ஆவணங்களில் கையெழுத்திட அதிகாரம் அளிக்கப்படுகிறது.

5-ல் ஒரு பகுதி பொதுக்குழு உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்தால் இருவரும் பொதுக்குழு கூட்டத்தை கூட்டும் அதிகாரம் உள்ளது. கட்சி விதிகளுக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்கப்படுகிறது.

பொதுக்குழு கூட்டம், நிர்வாக குழு கூட்டத்தை கூட்ட முடியாத நிலை இருக்கும் போது, கட்சி தொடர்பான முக்கிய முடிவுகள், அரசியல் முடிவுகள், கொள்கை முடிவுகளை அவர்கள் எடுத்துக்கொள்ளலாம். இப்படி பல அதிகாரங்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன.