செய்திகள்

இலவச பஸ்பாஸ் கிடைக்காமல் முதியோர்கள் தவிப்பு

சென்னையில் நீண்ட நேரம் காத்திருந்தும் இலவச பஸ் பாஸ்கள் பெற முடியாமல் முதியோர்கள் தவித்து வருகிறார்கள்.

சென்னை:

சென்னையில் நீண்ட நேரம் காத்திருந்தும் இலவச பஸ் பாஸ்கள் பெற முடியாமல் முதியோர்கள் தவித்து வருகிறார்கள்.

60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் குளிர் சாதன வசதிகள் இல்லாத சென்னை மாநகர போக்குவரத்து கழக அனைத்து பஸ்களிலும் பயணம் செய்யலாம். மாதத்திற்கு 10 டோக்கன்கள் வழங்கப்படும். பஸ் கண்டக்டரிடம் இந்த டோக்கன்களை கொடுத்து கட்டணம் இல்லாமல் மூத்த குடிமக்கள் பயணம் செய்யலாம்.

இந்த திட்டத்தை பயன்படுத்தி கொள்பவர்கள் அதற்குரிய படிவத்தில் தங்களது புகைப்படத்தை இணைத்து அடையாள அட்டை, மற்றும் டோக்கன்களை பெற்றுக்கொள்ளலாம். என தமிழக அரசு அறிவித்து இருந்தது.

இதற்கான விண்ணப்ப படிவத்தை போக்குவரத்து துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். மற்றும் சம்பந்தப்பட்ட போக்குவரத்து டெப்போக்களில் பெற்றுக்கொள்ளலாம். அதனை நிரப்பி கொடுத்ததும் பஸ்பாஸ், மற்றும் டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தது. இதன்மூலம் சென்னையில் 1,93,300 முதியோர்கள் பயன் பெற்று வந்தனர்.

இந்த நிலையில் முதியோர் பஸ்பாஸ் கூப்பன் பெறுவதற்காக சென்னையில் உள்ள அனைத்து பஸ் டெப்போக்கள், பஸ் நிலையங்களில் முதியோர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மணிக்கணக்கில் முதியோர் கால்கடுக்க காத்திருந்தனர். வேளச்சேரியில் உள்ள மாநகர பஸ் டெப்போவில் நூற்றுக்கணக்கான முதியோர்கள் பஸ்பாஸ் கிடைக்காமல் காத்திருந்தனர். கோயம்பேடு பஸ் நிலையத்திலும் முதியோர் கூட்டம் அலைமோதியது. இது குறித்து முதியோர் ஒருவர் கூறியதாவது:-

தமிழக அரசின் முதியோர் பஸ் பாஸ் திட்டம் மூலம் மாதம்தோறும் பயன்பெற்று வந்தோம். இந்த மாதம் பஸ் டெப்போக்களில் பஸ்பாஸ், டோக்கன் வழங்குவதில் பெரும் குளறுபடி நடந்து வருகிறது. போக்குவரத்து துறை அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டு வருகிறார்கள். நீண்ட நேரம் காத்திருக்க சொல்கிறார்கள்.

60 வயதை கடந்த பல முதியோர்கள் காலை முதல் மாலை வரை காத்திருந்தும் ஏமாற்றம் மிஞ்சியது. அதிகாரிகள் முதியோர்களை அலைக் கழிக்க வைக்கிறார்கள். முறையான ஆவணங்கள் இருந்தும் பஸ்பாஸ் கிடைக்கவில்லை. மாநகர போக்குவரத்து துறை அதிகாரிகள் உடனடியாக இதில் கவனம் செலுத்தி முதியோர்களுக்கு உடனடியாக பஸ்பாஸ் டோக்கன்கள் கிடைக்க செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.