செய்திகள்

தாயை தாக்கியதை கண்டித்ததால் தம்பியை அடித்து கொன்ற அண்ணன் கைது

தாயை தாக்கியதால் தம்பியை கொலை செய்து விட்டு நாடகமாடிய அண்ணன் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வானூர்:

விழுப்புரம் மாவட்டம் வானூர் காலனி காந்தி வீதியை சேர்ந்தவர் வீரப்பன். இவரதுமனைவி காளியம்மாள் (வயது 62). இவர்களது மகன்கள் கண்ணன் (48). மோகன் (35).

இவர்களில் கண்ணனுக்கு குடிப்பழக்கம் உண்டு. அவர் தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து தாயிடம் தகராறு செய்து வந்தார். சம்பவத்தன்று கண்ணன் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது தாய் காளியம்மாளிடம் மது குடிக்க பணம் தருமாறு கேட்டார். அவர் பணம் கொடுக்க மறுத்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கண்ணன். தாயாரை தாக்கினார். அப்போது அங்கு வந்த கண்ணனின் தம்பி மோகன், “ஏன் தாயை அடிக்கிறாய்?” என கேட்டு கண்ணனை கண்டித்தார்.

இதைத்தொடர்ந்து கண்ணனுக்கும், மோகனுக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. அப்போது கண்ணன் அங்கு கிடந்த தடியை எடுத்து மோகனின் தலையில் தாக்கி கீழே தள்ளினார். இதில் படுகாயம் அடைந்த மோகன் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். தம்பி இறந்து விட்டதை அறிந்ததும் கண்ணன் இதனை மறைக்க திட்டமிட்டார்.

பின்னர் அவர் இது குறித்து வானூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அப்போது தனது தம்பிக்கு மனநிலை பாதிக்கப்பட்டு, தவறி கீழே விழுந்து இறந்து விட்டார் என்று கூறினார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் மோகனின் உடலை மீட்டு புதுவை கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் மோகன் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் உத்தரவின் பேரில் வானூர் போலீசார் கண்ணனை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கண்ணன் தனது தம்பி மோகனை கொலை செய்து விட்டு அதை மறைக்க அவர், மோகன் கீழே விழுந்து இறந்து விட்டார் என்று கூறி நாடகமாடியது தெரியவந்தது.

அதன் பேரில் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து கண்ணனை தேடிவந்தனர். இன்று காலை கண்ணனை வானூர் இன்ஸ்பெக்டர் திருமணி கைது செய்தார்.

தம்பியை கொலை செய்து விட்டு நாடகமாடிய அண்ணன் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.