இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தை ‘கால்பந்து போர்’ என்று கூட அழைக்கலாம். தற்போதைய நிலையில் மெஸ்சி - ரொனால்டோவிற்கு இடையிலான போட்டி என்று அழைக்கப்படுகிறது. அப்படிப்பட்ட சிறப்புமிக்க போட்டி இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு தொடங்கியது. ஆட்டம் தொடங்கியதும் இரு அணி வீரர்களும் ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
4-வது நிமிடத்தில் மார்சிலோ கொடுத்த பந்தை கார்வாஜல் கோலாக்க முயற்சி செய்தார். ஆனால், பார்சிலோனா கோல் கீப்பர் அதை சிறப்பாக தடுத்தார். 12-வது நிமிடத்தில் மார்சிலோ கொடுத்த பந்தை ரொனால்டோ தலையால் முட்டி கோல் அடித்தார். ஆனால், ஆஃப் சைடு என்பதால் கோல் மறுக்கப்பட்டது. அதன்பின் பார்சிலோனா வீர்ரகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஆனால் ரியல் மாட்ரிட் கோல் கீப்பர் அருமையாக தடுத்தார்.
சுவாரஸ் பந்தை கடத்தும் காட்சி
20-வது நிமிடத்தில் லூகா மோட்ரிக் கொடுத்த பந்தை ரொனால்டோ கோல் அடிக்க முயற்சி செய்தார். ஆனால் பந்து தடுக்கப்பட்டது. 29-வது நிமிடத்தில் மெஸ்சி கொடுத்த பந்தை பவுலினோ கோல் எல்லையை நோக்கி அடித்தார். ஆனால் பந்து தடுக்கப்பட்டது. 30-வது நிமிடத்தில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிகளுக்கு தலா ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கோலாக்க முடியவில்லை.
31-வது நிமிடத்தில் ரொனால்டோ தலையால் முட்டிய பந்து கோல் கம்பத்திற்குள் செல்லாமல் வெளியே சென்றது. 33-வது நிமிடத்தில் ரொனால்டோ கொடுத்த பாஸை பென்சிமா கோல் எல்லையை நோக்கி அடித்தார். பந்து கோல் கம்பத்தில் பட்டு வெளியே சென்றது.
ரொனால்டோ பந்தை தலையால் முட்டி கோல் அடிக்க முயற்சிக்கும் காட்சி
38-வது நிமிடத்தில் மெஸ்சி கொடுத்த பந்தை பவுலினோ கோல் எல்லையை நோக்கி அடித்தார். ஆனால், ரியல் மாட்ரிட் வீரர்களால் தடுக்கப்பட்டது. 40-வது மற்றும் 41-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணிக்கு மூன்று வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் பலனில்லை. இதனால் முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
2-வது பாதி நேரம் தொடங்கியது 46-வது நிமிடத்தில் பார்சிலோனா கொடுத்த பந்தை ரொனால்டோ கோலாக்க முயன்றார். ஆனால் கோல் விழவில்லை. 52-வது நிமிடத்தில் அல்பா கொடுத்த பந்தை சுவராஸ் கோல் நோக்கி அடித்தார். ஆனால் பந்து தடுக்கப்பட்டது.
54-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிக் அணிக்கு கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வலது பக்கம் கார்னர் பகுதியில் இருந்து செர்ஜி ரொபர்ட்டோ கொடுத்த பந்தை லூயிஸ் சுவாரஸ் அபாரமான வகையில் கோலாக மாற்றினார். இதனால் பார்சிலோனா 1-0 என முன்னிலைப் பெற்றது.
58-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் கேப்டன் செர்ஜியோ ரமோஸ் மஞ்சள் அட்டை பெற்றார். 61-வது நிமிடத்தில் பார்சிலோனா கோல் அடிக்க முயற்சி செய்தது. 62-வது நிமிடத்தில் இரண்டு முறை மெஸ்சி கொடுத்த பந்தை கோலாக்க முயன்றார். ஆனால் பலனில்லை.
பின்னர் பவுலினோ அடித்த பந்தை ரியல் மாட்ரிட் வீரர்கள் தடுக்க முயன்றனர். அப்போது கோல் எல்லைக்குள் வைத்து டேனியல் கார்வாஜல் கை மீது பந்து பட்டது. இதனால் ரெட் கார்டு கொடுத்து கார்வாஜலை வெளியே அனுப்பிய நடுவர், பார்சிலோனாவிற்கு பெனால்டி வாய்ப்பு வழங்கினார். பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி மெஸ்சி கோல் அடித்தார். இதனால் பார்சிலேனா 2-0 என முன்னிலைப் பெற்றது.
பந்தை கடத்திச் செல்லும் மெஸ்சி
மேலும் ரியல் மாட்ரிட் 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது. 69-வது நிமிடத்தில் மெஸ்சி அடித்த பந்து தடுக்கப்பட்டது. 77, 78-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் வாய்ப்புகளும், 79-வது நிமிடத்தில் பார்சிலோனா வாய்ப்பும் தடுக்கப்பட்டது.
81-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணிக்கு அருமையான வாய்ப்பு கிடைத்தது. கோல் எல்லைக்குள் வைத்து ரியல் மாட்ரிட் வீரர் அடித்த பந்தை செர்ஜியோ ரமோஸ் இடது காலால் கோல் கம்பத்திற்குள் தள்ள முயற்சி செய்தார். ஆனால் பந்து கோல் காலில் படாமல் சென்றுவிட்டது.
ரியல் மாட்ரிட் கேப்டன் ரமோஸ் பந்தை அடிக்க முயற்சிக்கும் காட்சி
84-வது நிமிடத்தில் மெஸ்சி கொடுத்த பந்தை அந்த்ரே கோமஸ் கோலாக மாற்ற முயற்சி செய்தார். ஆனால் பலனில்லை. அதன்பின் 90 நிமிடங்கள் வரை இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. காயம், ஆட்டம் தடையை கணக்கிட்டு 3 நிமிடங்கள் அதிகமாக வழங்கப்பட்டது. ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் மெஸ்சி கொடுத்த பந்தை அலெக்ஸ் விடால் கோல் எல்லையை நோக்கி அடித்தார். அந்த பந்து ரியல் மாட்ரிட் கோல் கீப்பர் கையில் பட்டு பின்னர் கோல் எல்லைக்குள் சென்றது. இதனால் பார்சிலோனா 3-0 என அபார வெற்றி பெற்றது.