செய்திகள்

பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் பலனை அவசரப்பட்டு தீர்மானிக்க முடியாது: அமித்ஷா கருத்து

பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் பலனை அவசரப்பட்டு தீர்மானிக்க முடியாது என்று பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா கூறினார்.

மாலை மலர்

ஆமதாபாத்:

பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் பலனை அவசரப்பட்டு தீர்மானிக்க முடியாது என்று பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா கூறினார்.

நாட்டில் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந் தேதி அறிவித்தார். இதைத்தொடர்ந்து, அந்த ரூபாய் நோட்டுகளை வைத்து இருந்தவர்கள், அவற்றை தங்கள் வங்கி கணக்கில் டெபாசிட் செய்தனர். அந்த ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிய ரூ.2,000, ரூ.500, ரூ.200, ரூ.50 நோட்டுகள் வெளியிடப்பட்டன.

மத்திய அரசு அதிரடியாக மேற்கொண்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கை எதிர்பார்த்த பலனை தராமல் தோல்வியில் முடிந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.

இந்த நிலையில், குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பாரதீய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவிடம் இதுபற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

நாட்டில் உயர்மதிப்பு கொண்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளில் 80 சதவீத நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. 20 சதவீத நோட்டுகள்தான் அரசியல்வாதிகள் மற்றும் ஊழல்பேர்வழிகளிடம் இருந்தது. செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளில் 99 சதவீத நோட்டுகள் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டதன் மூலம் திரும்ப வந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி கூறி உள்ளது.

செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை அதிக அளவில் வங்கிகளில் டெபாசிட் செய்தவர்கள் எளிதில் தப்பிவிட முடியாது. அதற்கு அவர்கள் உரிய கணக்கு காட்டி அதற்கான வருமான வரி மற்றும் அபராத தொகையை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அந்த பணம் நாட்டின் அபிவிருத்திக்காக பயன்படுத்தப்படும்.

எனவே புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது மிகச்சிறந்த நடவடிக்கை. இந்த திட்டத்தின் பலனை அவசரப்பட்டு தீர்மானிக்க முடியாது.

மோடி அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 3 கோடியே 60 லட்சம் பேர்தான் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தனர். ஆனால் இப்போது 6 கோடியே 30 லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்து இருக்கிறார்கள்.

இவ்வாறு அமித்ஷா கூறினார்.