புதுடெல்லி:
இந்தியாவில் வசிக்கும் அனைவருக்கும் ஆதார் அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மத்திய அரசின் அனைத்து திட்டங்களுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. இந்த ஆதார் உலகிலேயே மிகவும் பாதுகாப்பான அடையாள அட்டை என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ஆதார் பெரிய அளவில் பாதுகாப்பான அட்டை இல்லை என்பது பஞ்சாப்பை சேர்ந்த ரச்னா கயிரா என்ற பத்திரிக்கையாளர் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி ரூ.500 செலுத்தினால் கோடிக்கணக்கான மக்களின் ஆதார் தகவல்கள் அடங்கிய இணையதள முகவரி மற்றும் அதன் கடவுச் சொல் அனுப்பப்படுகிறதாம். ஆனால் இந்த புகாரை ஆதார் சேவை வழங்கி வரும் உதாய் அமைப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
அந்த மோசடியை கண்டுபிடித்து செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளரை மீது பஞ்சாப் போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த வாட்ஸ் ஆப் குழுவின் மீது எந்த விதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், விக்கி லீக்ஸ் இணையதளம் மூலம் உலகின் பெரிய தலைவர்களின் மோசடிகளை அம்பலப்படுத்திய எட்வர்ட் ஸ்னோடென், ஆதார் அமைப்பினரை கைது செய்ய வேண்டும் என கூறியுள்ளார். அவர் தற்போது ரஷ்யாவில் தலைமறைவாக இருக்கிறார்.
இதுகுறித்து எட்வர்ட் ஸ்னோடென் பதிவு செய்துள்ள டுவிட்டில், ''ஆதார் கார்ட் மோசடியை கண்டுபிடித்த பத்திரிக்கையாளர் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. அவருக்கு விருது கொடுக்க வேண்டும். அரசு உண்மையில் நீதியை நிலைநாட்ட விரும்பினால் இதற்கு காரணமான நபர்களை கைது செய்ய வேண்டும். இதற்கு காரணமான நபர்கள் வேறு யாரும் இல்லை. ஆதார் அமைப்பின் அதிகாரிகள்தான்'' என்று வெளிப்படையாக குறிப்பிட்டு உள்ளார்.
இதற்கு முன்பே அவர் ஆதார் குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #AadhaarLeaks #EdwardSnowden #tamilnews