திருவனந்தபுரம்:
கேரள பள்ளிகளில் 1 வது வகுப்பில் இருந்து கம்ப்யூட்டர் கல்வி கற்றுத் தரப்படுகிறது.
கேரள பள்ளிகளில் 8-வது வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை தகவல் மற்றும் தொடர்பு தொழில் நுட்பம் (ஐ.டி) பாடத்திட்டம் அமலில் உள்ளது. இது கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது 1 முதல் 7-வது வகுப்பு வரை தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப பாடத் திட்டத்தின் மூலம் கல்வி கற்றுத்தரப்பட உள்ளது. இதன் மூலம் பாடங்கள் அனைத்தும் கம்ப்யூட்டர் மூலம் கற்றுத்தரப்படும்.
கேரளாவில் உள்ள 9,279 பள்ளிகளில் இப்பாடத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. வருகிற ஜூன் 1-ந் தேதி முதல் அதாவது இக்கல்வி ஆண்டு முதல் இப்பாடத்திட்டம் அமலாகிறது.
இத்தகவலை கேரள கல்வித்துறை மந்திரி சி. ரவீந்திரநாத் தெரிவித்தார். ஐ.டி. (தகவல் மற்றும் தொடர்பு) தொழில்நுட்ப பாடத் திட்டம் அமல் படுத்தப்பட உள்ளதால் அனைத்து கீழ்மட்ட மற்றும் மேல் மட்ட தொடக்க பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆய்வுக் கூடங்கள் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட உள்ளன. பள்ளிகள் திறக்கப்பட்டதும் அதற்கான ஆய்வு நடத்தப்படும் என்றார்.