சென்னை:
சட்டசபையில் இன்று தி.மு.க. எம்.எல்.ஏ. ஆஸ்டின் (கிள்ளியூர்) ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசியதாவது:-
குமரி மாவட்டத்தில் சரக்கு பெட்டகம் இனயம் மற்றும் துறைமுகம் அமைப்பதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மீனவர்கள், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று பயப்படுகிறார்கள். கடலுக்குள் தான் இது தொடர்பான கட்டிடங்கள் கட்டப்படும் என்று கூறுகிறார்கள்.
அவ்வாறு செய்யும் போது 30 மீட்டர் ஆழத்துக்கு கடலில் தோண்டும் நிலை ஏற்படும். அதனால் கடல் அரிப்பு ஏற்பட்டு மீனவ கிராமங்கள் பாதிக்கும். ரெயில் பாதை அமைக்கப்படும் போது வீடுகள் மற்றும் நிலங்கள் பாதிக்கப்படும் என்றே மக்களின் நலன் கருதி முதல்-அமைச்சர் தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்து பேசியதாவது:-
மத்திய கடல் மற்றும் தரை வழி போக்குவரத்து துறை அமைச்சகம் கன்னியாகுமரி மாவட்டம், இனயம் மற்றும் மேல்மிடாலம் மீனவ கிராமங்களுக்கிடையே 28,000 கோடி ரூபாய் செலவில் வர்த்தக துறைமுகம் ஒன்றை அமைக்க முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.
கடந்த 2015 ஆண்டு டிசம்பர் மாதம் கல்லுக்குட்டி மற்றும் தொழிக்கோடு கிராமங்களுக்கு இடையே துறைமுகம் கட்டுவதற்கான முதற்கட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.
இந்நிலையில், இனயம் மற்றும் அதனை சுற்றியுள்ள மீனவ கிராமத்தினர் மேற்படி வர்த்தக துறைமுகம் அமைக்கப்பட்டால், தங்களது வாழ்வாதாரமான மீன் பிடி தொழில் பாதிக்கப்படுமென்றும், அப்பகுதியில் தங்களுக்கு சொந்தமான நிலங்கள், கல்வி நிறுவனங்கள், வழிப்பாட்டுத் தலங்கள் ஆகியவை அத்திட்டத்தினால் பாதிப்படையும் என்றும் கூறி துறைமுகம் அமைக்கும் திட்டத்திற்கு “இனயம் வர்த்தக துறைமுகம் எதிர்ப்பு குழு’’ என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி, எதிர்ப்பு தெரிவித்ததோடு, அத்திட்டத்தை கைவிடுமாறு கோரி போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், மத்திய அரசு வர்த்தக துறைமுகத்தை இனயம் பகுதியில் அமைப்பதற்கு பதிலாக வனத்துறைக்கு சொந்தமான நிலம் அதிகமாக உள்ள கோவளம் பகுதியில் அமைக்க உத்தேசித்து, அதற்கான நடவடிக்கைகளை துவக்கியது. அதன் ஒரு பகுதியாக 20.12.2017 அன்று திட்ட அதிகாரிகள் கோவளம் கிராமம் அருகில் பூமி பூஜைக்கு ஏற்பாடுகள் செய்த போது உள்ளூர் மீனவர்கள் 200 பேர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அப்பணிகள் நிறுத்தப்பட்டது. மேலும், இத்திட்டப் பணி தொடர்பாக சில அதிகாரிகள் கடலில் நீர் மாதிரிகளை சேகரிக்க சென்ற போதும் மீனவர்கள் அதனை தடுத்தனர்.
கடந்த 23.12.2017 அன்று கோவளத்தில் சுப.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், கோவளம் பகுதியில் வர்த்தக துறைமுகம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதெனவும், இது தொடர்பாக கோவளத்தில் போராட்டக்குழு ஒன்றை அமைப்பதெனவும் முடிவு செய்தனர். இக்கூட்டத்திற்கு எதிராக, கோவில்விளை என்ற கிராமத்தில் 25.12.2017 அன்று நடைபெற்ற மற்றொரு கூட்டத்தில் வர்த்தக துறைமுகம் அமைக்க அதிகாரிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது என்று முடிவு செய்தனர்.
கடந்த 30.12.2017 அன்று மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் துறைமுக திட்ட ஆய்வுப் பணிகள் தொடர்பாக கீழமணக்குடி கிராமத்திற்கு சென்ற போது மீனவர்கள் சுமார் 500 பேர் அவர்களை முற்றுகையிட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து, காவல் துறையினர் தலையீட்டின் பேரில் கலைந்தனர்.
வர்த்தக துறைமுகம் அமைவதற்கு ஆதரவு தெரிவிக்கும் பொதுமக்கள் சுமார் 2400 பேர், 31.12.2017 அன்று துறைமுகத்தை அப்பகுதியில் அமைக்கக் கோரி முகிலன் குடியிருப்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தமிழ்நாட்டின் பொருளாதார ரீதியான முன்னேற்றத்திற்கு இந்த வர்த்தகத் துறைமுகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்ற கருத்தின் அடிப்படையிலும், அனைத்து தரப்பு மக்களுக்கும் இதனால் ஏற்படும் பாதிப்புகளைக் கண்டறிந்து அதனைக் களைவதற்கும், விஷ்ணு என்ற அதிகாரியை சிறப்புப் பணி அலுவலராக நியமித்து உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
அங்குள்ள அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளையும், அரசு கனிவுடன் பரிசீலித்து, தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #tamilnews