செய்திகள்

பர்கூரில் ரூ.360 கோடியில் காலணி தயாரிப்பு தொழிற்சாலை: எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

பர்கூர் சிப்காட் வளாகத்தில் ரூ.360 கோடியில் காலணி தயாரிப்பு தொழிற்சாலையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

மாலை மலர்

சென்னை:

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சிப்காட் தொழில் வளாகத்தில், செய்யார் சிறப்பு பொருளாதார மண்டல வளர்ச்சி நிறுவனம், அதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தில் நில மேம்பாடு மற்றும் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியுள்ளது.

இதில் ரூ.360 கோடி செலவில் லோட்டஸ் புட்வேர் என்ற நிறுவனம் அதனுடைய துணை நிறுவனமான பேர்வே எண்டர் பிரைசஸ் நிறுவன தொழிற்சாலையை சிறப்பு பொருளாதார மண்டலமாக செயல்படுத்த உள்ளது.

இப்புதிய காலணி பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைக்காக பர்கூர் சிப்காட் தொழில் வளாகத்தில் 146.72 ஏக்கர் நிலம், பர்கூர் சிப்காட் நிறுவனத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலை மூலமாக சுமார் 10,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இந்த தொழிற்சாலையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சம்பத், பாலகிருஷ்ணா ரெட்டி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன், மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சேலம் மாவட்டம், மேட்டூரில் 12 கோடியே 71 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நிரந்தர காவல் பயிற்சிப் பள்ளி, 75 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நிரந்தர காவல் பயிற்சிப் பள்ளிக்கான நிர்வாகக் கட்டடம், 3 கோடியே 20 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 200 காவலர்களுக்கான பாளையம், என மொத்தம் 16 கோடியே 68 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல் துறை கட்டடங்களை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

அவர் மேலும் திறந்து வைத்த கட்டிடங்கள் வருமாறு:-

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் 24 காவலர் குடியிருப்புகள், கோவை மாவட்டம்- கோட்டூரில் 19 காவலர் குடியிருப்புகள், ராமநாதபுரம் நகரம் மற்றும் தொண்டியில் 77 காவலர் குடியிருப்புகள், தேனியில் 14 காவலர் குடியிருப்புகள், ஆவடி தமிழ்நாடு சிறப்பு காவல் படை 3ஆம் அணியில் 154 காவலர் குடியிருப்புகள், தாழையூத்தில் 34 காவலர் குடியிருப்புகள், குலசேகர பட்டிணம் மற்றும் கயத்தாரில் 59 காவலர் குடியிருப்புகள், என 42 கோடியே 77 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 381 காவலர் குடியிருப்புகள்;

கோவை சாய்பாபா காலனி மற்றும் முடீஸ், காஞ்சிபுரம் மாவட்டம்-மகரல் மற்றும் தேனி மாவட்டம்- குமுளி ஆகிய இடங்களில் 3 கோடியே 12 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4 காவல் நிலையங்கள்;

அரியலூரில் 1 கோடியே 93 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அதிரடிப் படைக்கான பாளையம், மதுரையில் 4 கோடியே 72 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆயுதப்படைக்கான நிர்வாகக் கட்டடம், திருப்பூர் மாவட்டம்-நல்லூரில் 57 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அலுவலகம் மற்றும் சமையலறையுடன் கூடிய நாய் பட்டறை;

சென்னை-ஆலந்தூரில் 5 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை சென்னை நகர பிரிவுக்கான 7 அலுவலகக் கட்டடங்கள்;

கோவை மத்திய சிறைச் சாலை வளாகத்தில் 2 கோடியே 39 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 20 சிறைத் துறை குடியிருப்புகள் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் புழல் மத்திய சிறை வளாகத்தில் 3 கோடியே 71 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 30 சிறைத் துறை குடியிருப்புகள்;

சென்னை-மருதம் அதிரடிப்படை வளாகத்தில் 27 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வெடி குண்டு அருங்காட்சியகம்;

என மொத்தம், 81 கோடியே 87 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான காவல்துறை மற்றும் சிறைத்துறை கட்டடங்கள்.

மேலும், புதிதாக துவங்கப்பட்டுள்ள தமிழ் நாடு காவல்துறையின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று துவக்கி வைத்தார்.