செய்திகள்

திருத்தணியில் ரூ. 70 லட்சம் செலவில் திருமண மண்டபம் - எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

திருத்தணியில் ரூ.70 லட்சம் செலவில் திருமண மண்டபத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

மாலை மலர்

சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்ப் பண்பாட்டின் பெட்டகமாகவும், ஆன்மீகத்தின் இருப்பிடமாகவும், கலைத்திறனின் நிலைக் களமாகவும் விளங்குகின்ற திருக்கோயில்களின் சொத்துக்களைப் பாதுகாத்து பராமரிப்பது, அன்றாட பூஜைகள் தங்கு தடையின்றி நடப்பதை உறுதி செய்வது, பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பது போன்ற பணிகளை இந்து சமய அறநிலையத் துறை மூலமாக அம்மா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, ஆற்காடு குப்பம், சோளீஸ்வரசுவாமி திருக்கோயிலில் தரை மற்றும் முதல் தளத்துடன் 5,700 சதுர அடி பரப்பளவில் 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 200 நபர்கள் கலந்துக் கொள்ளும் வகையில் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபம்.

கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு, தேவசம் மேல்நிலைப் பள்ளியில் 2,641 சதுர அடி பரப்பளவில் 175 மாணவ- மாணவிகள் பயிலும் வகையில் 54 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நான்கு வகுப்பறைகள்.

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை கிருஷ்ணசுவாமி திருக்கோயிலில் 1,706 சதுர அடி பரப்பளவில், 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 50 பக்தர்கள் உணவருந்தும் வகையில் கட்டப்பட்டுள்ள அன்னதானக் கூடம் மற்றும் 570 சதுர அடி பரப்பளவில் 12 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் திருக்கோயில் வாகனங்களை பாதுகாக்க கட்டப்பட்டுள்ள திருப்புறை வாகன மண்டபம் என மொத்தம் 1 கோடியே 67 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான இந்து சமய அறநிலையத் துறை கட்டடங்களை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #tamilnews