அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றுக்கொண்ட காட்சி. 
செய்திகள்

ஜெயலலிதா வழியில் ஒற்றுமையாக பணியாற்றுவோம்: எடப்பாடி-ஓ.பி.எஸ். தலைமையில் உறுதிமொழி

ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி மொழி வாசிக்க அதனை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைவரும் வாசித்து உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

மாலை மலர்

சென்னை:

ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி மொழி வாசிக்க அதனை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்து அமைச்சர்களும், நிர்வாகிகளும் திரும்ப வாசித்து உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

* தமிழ்நாட்டு அரசியலில் புதிய சரித்திரங்களை படைத்த சாதனைச்செம்மல் அம்மா சமூகநீதியில் உறுதியான நம்பிக்கை, பெண் விடுதலையில் அசைக்க முடியாத பற்றுறுதி, மதச்சார்பற்ற உறுதியான இறை நம்பிக்கை, எளியோருக்கு சமூகப் பொருளாதார பாதுகாப்பு அளிப்பதில் அர்ப்பணிப்பு உணர்வோடு தனது அரசியல் பாதையை புதுமையும், புரட்சியும் நிறைந்த போர்ப்பாதையாக மாற்றி வாழ்ந்தவர் அம்மா. அவரால் தமிழ்நாடு அடைந்திட்ட வளர்ச்சிகளை மக்களுக்கு எந்நாளும் எடுத்துக் கூறிட உறுதி ஏற்கிறோம்.

எம்.ஜி.ஆர் உருவாக்கிய அ.தி.மு.க.வை தனது ஒப்பற்ற அறிவாற்றலால், கடின உழைப்பால், எண்ணற்ற தியாகங்களால், ஆயிரம் காலத்து பயிராக நிலைபெறச் செய்த அம்மா வழியில் கழகப் பணிகளை தொடர்ந்து ஆற்றிடுவோம்.

* அ.தி.மு.க. பொதுச்செயலாளராக 34 ஆண்டுகள் தன்னையே அர்ப்பணித்து பணியாற்றிய அம்மாவின் தியாகத்தை மக்கள் மத்தியில் எடுத்துக்கூறி அவரது புகழுக்கு புகழ் சேர்ப்போம்.

* ‘‘மக்களால் நான், மக்களுக்காகவே நான்’’, ‘‘உங்களால் நான், உங்களுக்காகவே நான்’’, ‘‘அமைதி, வளம், வளர்ச்சி’’ என்ற பாதையில் நொடிதோறும் தன் வாழ்வை மக்களுக்கான தியாக வாழ்வாக வாழ்ந்த அம்மாவின் கட்டளையை ஏற்போம்.

‘‘கழகம் நமக்கு என்ன செய்தது?’’ என்பதைவிட ‘‘கழகத்திற்கு நாம் என்ன செய்தோம்?’’ என்ற கேள்வியை நம் இதயத்தில் எழுப்பி ஒற்றுமையுடனும், உறுதியுடனும் கழகப் பணிகளை ஆற்றிடுவோம்.

* எனக்கு பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அ.தி.மு.க. மக்களுக்காகவே இயங்கும் என்ற அம்மாவின் சூளுரையை மனதில் கொள்வோம்.

* மக்கள் மனதில் நீங்காது நிறைந்திருக்கும் அம்மா அமைத்து தந்த கழக அரசினை வெற்றிமேல் வெற்றி பெறச்செய்வோம்.

* அ.தி.மு.க.வை வளர்த்து கட்டிக்காத்த அம்மாவின் வழியில் கழகத்தின் உண்மை தொண்டராகவும், நம்பிக்கைக்குரிய விசுவாசியாகவும் தொடர்ந்து உழைத்திடுவோம்.

* விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை இடைத்தேர்தலில் ஒற்றுமையாகவும், கடினமாகவும் உழைத்து வெற்றிபெற்றது போல் வருகிற உள்ளாட்சி தேர்தலிலும் மாபெரும் வெற்றி பெற்று கழகத்தை வெற்றி சிகரத்தில் வீற்றிருக்க செய்வோம்.

* தமிழர் உள்ளங்களில் அம்மா, தமிழர் இல்லங்களில் அம்மா, இருந்தபோதும் அம்மா, மறைந்த பிறகும் அம்மா, அப்போதும் அம்மா, இப்போதும் அம்மா, எப்போதும் அம்மா அந்த இதய தெய்வத்தின் வழியில் கழகத்தை காப்போம். வெல்வோம், களம் அனைத்திலும் வெல்வோம்.

இவ்வாறு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.