செய்திகள்

கொசஸ்தலை குறுக்கே தடுப்பணை கட்டுவது தொடர்பாக ஆந்திர முதல்வருக்கு எடப்பாடி பழனிச்சாமி கடிதம்

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஆந்திரா தடுப்பணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.

மாலை மலர்

ஆந்திராவில் உற்பத்தியாகி தமிழ்நாட்டின் வழியாக பாலாறு, கொசஸ்தலை ஆறுகள் பாய்ந்தோடுகிறது.

ஏற்கனவே பாலாற்றின் குறுக்கே பல தடுப்பணைகளை ஆந்திரா கட்டி நீரை தேக்கி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் தமிழகத்துக்கு வரும் தண்ணீர் நின்றுவிட்டது.

இந்த நிலையில் கொசஸ்தலை ஆற்றுக்கு வரும் தண்ணீரை தடுக்கும் வகையில் ஆந்திர மாநில அரசு கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே பல தடுப்பணைகளை கட்டி வருகிறது. எனவே இதை தடுத்து நிறுத்த மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

ஆந்திர மாநில நீர்ப்பாசனத்துறை சார்பில் ‘கொசஸ்தலை ஆற்றின் துணை நதியான குசா ஆற்றின் குறுக்கே சித்தூர் மாவட்டத்தில் நிலவாயல், கர்வெட் நகர் மண்டல் ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்டி வரும் முக்கிய பிரச்சினையை தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.

கொசஸ்தலை ஆறானது இரு மாநிலங்களுக்கு இடையே ஓடுவதாகும். இதில் ஆந்திர அரசின் நடவடிக்கை தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலையை எற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் குசா ஆற்றின் குறுகுகே உள்ள வெளியகரம் அணையால் 354.33 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதால் வெளியகரம் அணைக்கு வரும் நீர் தடுக்கப்பட்டு விடும்.

மாநிலங்களுக்கு இடையே பாயும் நதிகளில் இது போன்ற தடுப்பணைகள் கட்டும் போது சம்பந்தப்பட்ட மாநிலங்களுடன் ஆலோசனை நடத்தி அனுமதி பெற வேண்டும்.

ஆனால் ஆந்திர அரசு கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே புதிய பணிகளை தொடங்கும்முன் அது பற்றி தமிழக அரசுடன் எந்த ஆலோசனையும் அனுமதியும் பெறவில்லை.

ஆந்திர அரசின் நடவடிக்கையால் தமிழகத்தில் வெளியகரம் அணைக்கு இயற்கையாக வரும் நீர் தடுக்கப்பட்டு பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே சித்தூர் மாவட்டத்தில் நிலவயல், கர்வெட் நகர் மண்டல் ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்டும் பணிகளில் ஆந்திர அரசு ஈடுபட்டு இருப்பதை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கிறது.

இந்த பிரச்சினையில் தாங்கள் உடனடியாக தலையிட்டு கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே நீரை தடுக்கும் வகையிலோ அல்லது திருப்பி விடும் வகையிலோ தடுப்பணைகள் கட்டும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இதில் தங்களின் சாதகமான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறு கடிதத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.