செய்திகள்

‘அம்மா சிமெண்ட்’ திட்டத்தை கண்காணிக்க ‘65 டேப்’ கருவிகள்: எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

அரசு அலுவலர்களுக்கு ‘அம்மா சிமெண்ட்’ திட்டத்தை கண்காணிக்க ‘65 டேப்’ கருவிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

மாலை மலர்

சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சொந்த வீடு கட்டும் ஏழை மற்றும் நடுத்தரவர்க்க மக்கள் வீடு கட்டும் போது ஏற்படும் செலவினங்களை குறைக்கும் பொருட்டு, 2015ஆம் ஆண்டு ‘அம்மா சிமெண்ட்’ என்னும் திட்டம் துவக்கப்பட்டது. இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக டான்செம் விளங்கி வருகிறது.

வெளிச்சந்தையில் சிமெண்டின் விலை ரூ.350லிருந்து ரூ.360 வரை விற்பனை செய்யப்படும் நிலையில், அம்மா சிமெண்ட், மூட்டை ஒன்றுக்கு ரூ.190 என்ற சலுகை விலையில் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவது இத்திட்டத்தின் சிறப்பு அம்சம் ஆகும்.

இத்தகைய சிறப்பு மிக்க அம்மா சிமெண்ட் திட்டத்தை செம்மைப்படுத்தும் பொருட்டு, 1 கோடி ரூபாய் செலவில், கணினி மூலம் மாநிலம் முழுவதும் நேரடி பதிவு, விற்பனை மற்றும் கண்காணிக்கும் முறையை செயல்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள உயர்தர ஒருங்கிணைக்கப்பட்ட கணினி மென் பொருளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

அம்மா சிமெண்ட் திட்டத்தை திறம்பட கண்காணிக்க ஏதுவாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை உதவி இயக்குநர்கள் (தணிக்கை), நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மண்டல மேலாளர்கள் ஆகியோருக்கு 25 லட்சம் ரூபாய் செலவில் டான்செம் நிறுவனத்தால் வாங்கப்பட்ட 65 டேப் கருவிகளை வழங்கிடும் அடையாளமாக, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 10 அரசு அலுவலர்களுக்கு டேப் கருவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில், அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.