சேலம்:
சேலம் நெத்திமேட்டில் வசித்து வருபவர் வெங்கடாசலம். முன்னாள் எம்.எல்.ஏ.வான இவர் தினகரன் அணியில் சேலம் மாநகர் மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார்.
கட்சி நிர்வாகிகளுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாதகாப்பட்டி உழவர் சந்தை மற்றும் பல்வேறு பகுதிகளில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக துண்டு பிரசுரம் வினியோகம் செய்தார்.
துண்டு பிரசுரத்தில் அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச் செயலாளர் தினகரன், கர்நாடக மாநில அம்மா அணி செயலாளர் புகழேந்தி, வெற்றிவேல் எம்.எல்.ஏ. ஆகியோரது படங்களும் இடம் பெற்றிருந்தது.
நீட் தேர்வால் மாணவ- மாணவிகள் பாதிப்பு அடைந்துள்ளனர். இதை விலக்குவதற்கு எடப்பாடி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை உள்பட பல வாசகங்கள் துண்டு பிரசுரித்ததில் இடம் பெற்றிருந்தன.
இதுபற்றி அஸ்தம்பட்டி பகுதி அ.தி.மு.க. செயலாளர் சரவணன் அன்னதானபட்டி போலீசில் புகார் செய்தார்.
இதன் பேரில் தினகரன், புகழேந்தி, வெற்றிவேல் எம்.எல்.ஏ. முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.கே.செல்வம், வெங்கடாசலம் உள்பட 17 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து போலீசார் தினகரன் ஆதரவாளர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இன்று காலை வெங்கடாசலம் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களை கைது செய்ய முடிவு செய்துள்ளனர்.
கைதான வெங்கடாசலம் நிருபர்களிடம் கூறியதாவது:-
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சேலத்தில் தினகரன் அணியை சேர்ந்த நாங்கள் கடந்த 29-ந்தேதி துண்டுபிரசுரம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டோம். இந்த செயலை அரசுக்கு எதிராக அவதூறு பரப்பியதாக கூறி போலீசார் எங்களை கைது செய்து இருக்கிறார்கள். இது அரசியலில் பழி வாங்கும் நடவடிக்கையாகும்.
தினகரன் அணியை சேர்ந்த எங்கள் மீது வேண்டும் என்றே அரசு எங்களது செயல்பாட்டை முடக்கும் வகையில் கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இது போன்ற நடவடிக் கைகளை கண்டு நாங்கள் அஞ்சமாட்டோம்.
தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யும் வரை எங்களது போராட்டம் ஓயாது. இது போன்று எத்தனை வழக்குகள் வந்தாலும் நாங்கள் சந்திக்க தயாராகவே உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் பேச்சு சுதந்திரத்தை முடக்க பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. என் மீதும் மற்றவர்கள் மீதும் போடப்பட்டுள்ள வழக்கை சட்டப்படி சந்திப்போம் என்றார்.