செய்திகள்

அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்தில் ஓ.பி.எஸ். - எடப்பாடி ஆதரவாளர்கள் மோதல்

அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே மோதல் நடந்த சம்பவம் அ.தி.மு.க.வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெரியபாளையம்:

எல்லாபுரம் ஒன்றிய அ.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் தண்டலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். இதில், அமைச்சர்கள் பெஞ்சமின், மா.பா.பாண்டியராஜன், மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும், கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று பேசினர்.

அப்போது முன்னாள் ஒன்றிய தலைவர் அம்மினி மகேந்திரன் கூறும்போது, “கடந்த ஒரு வருடமாக கட்சி நிர்வாகிகளுக்கு எந்த நிகழ்ச்சிக்கும் அழைப்பு இல்லை, ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற ஒரு எம்.எல்.ஏ கலந்து கொள்ளும் நிகழ்ச்சி சிறப்பாக அமைகிறது. நமது எம்.எல்.ஏ கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நிர்வாகிகளுக்கே தெரிவதில்லை. பின்னர் எப்படி தொண்டர்கள் வருவார்கள்” என்று கேட்டார்.

இதனால் கூட்டத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இரண்டு அணியாக மாறி ஒருவரை, ஒருவர் கடுமையான வார்த்தைகளால் தாக்கி பேசிக்கொண்டனர்.

அ.தி.மு.க. நிகழ்ச்சிகளில் தொண்டர்களுக்கு முறையான அழைப்பு இல்லை, அரசு ஒப்பந்தங்கள் கொடுப்பதில்லை என்று பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டினர். ஒரு கட்டத்தில் வாக்கு வாதம் முற்றி அமைச்சர்கள் முன்னிலையில் தள்ளுமுள்ளு உருவானது.

இதையடுத்து அமைச்சர்கள் பென்சமின், பாண்டியராஜன் ஆகியோர் தொண்டர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதன் பின்னர் கூட்டத்தை விரைந்து முடித்துக்கொண்டு அவர்கள் புறப்பட்டு சென்றனர். அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்தில் மோதல் நடந்த சம்பவம் அ.தி.மு.க.வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews

SCROLL FOR NEXT