செய்திகள்

எடப்பாடி - ஓ.பி.எஸ். தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நாளை ஆலோசனை

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நாளை நடக்கிறது.

மாலை மலர்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க.வும் கடந்த திங்கட்கிழமை ஒன்றாக இணைந்தன.

இதையடுத்து அ.தி.மு.க.வை வழி நடத்த 15 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார்.

இந்த குழு தற்காலிகமாக செயல்படவே அமைக்கப்பட்டுள்ளது. எனவே அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டப்பட்டு, அதில் சசிகலாவை நீக்கி விட்டு, புதிய பொதுச்செயலாளராக ஓ.பன்னீர்செல்வத்தை தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் தற்போது தொடங்கியுள்ளது.

அதன்படி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனை கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழக அலுவலகத்தில் நாளை (28-ந்தேதி) நடக்கிறது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மாவட்ட செயலாளர்கள் தலைமை கழக நிர்வாகிகள் என 250 பேர் மட்டுமே கலந்து கொள்கிறார்கள்.

டி.டி.வி.தினகரனுக்கு 21 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் இந்த கூட்டம் மிகவும் முக்கியத்துவம் பெற்றதாக கருதப்படுகிறது.

அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்கு பிறகு நடக்கும் முதல் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இதுவாகும். இந்த கூட்டத்தில் சசிகலா மற்றும் அவர் குடும்பத்தினரை அ.தி.மு.க.வில் இருந்து விலக்கும் முடிவு எடுக்கப்படும். மேலும் கட்சியை வழி நடத்த அமைக்கப்பட்டுள்ள 15 பேர் ஒருங்கிணைப்புக் குழுவுக்கு ஒப்புதல் பெறப்படும்.

இதற்கு சட்ட திருத்தம் தேவைப்படும் பட்சத்தில் அதற்கான ஒப்புதல்களும் பெறப்படும். குறிப்பாக சசிகலா குடும்பத்தின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த கட்சி விதிகளில் மாற்றம் செய்யும் முடிவுகளுக்கு கூட் டத்தில் ஒப்புதல் பெறப்படும்.

அ.தி.மு.க. பொதுக் குழுவை எப்போது கூட்டுவது என்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும்.

செப்டம்பர் முதல் வாரத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டப்படலாம் என்று தெரிகிறது.