செய்திகள்

எடப்பாடி பழனிச்சாமி இன்று டெல்லி பயணம்: பா.ஜ.க ஜனாதிபதி வேட்பாளருக்கு நேரில் சென்று ஆதரவு

பா.ஜ.க சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த்க்கு நேரில் ஆதரவளிப்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று டெல்லி செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை:

பா.ஜ.க சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த்க்கு நேரில் ஆதரவளிப்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று டெல்லி செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுக அம்மா அணி சார்பில் நேற்று இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக தலைமை அலுவலத்திற்கு வந்தார்.

அங்கு அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின் வெளியே வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ‘‘ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான என்.டி.ஏ. வேட்பாளரான ராம்நாத் கோவிந்துக்கு அ.தி.மு.க. அம்மா அணி ஆதரவு அளிக்கும்’’ என்று தெரிவித்தார்.

மேலும், மோடியின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறினார். இந்நிலையில், ராம்நாத் கோவிந்த்க்கு நேரில் ஆதரவளிப்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று டெல்லி செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல்லி செல்லும் எடப்பாடி பழனிச்சாமி அங்கு பிரதமர் உள்ளிட்ட வேறு தலைவர்களை சந்தித்து பேச இருக்கிறாரா? என்ற விபரம் வெளியாகவில்லை.