செய்திகள்

ரூ.5100 கோடி மதிப்பில் தங்க, வைர நகைகள் நிரவ் மோடி கடைகளில் பறிமுதல்

நிரவ் மோடிக்கு சொந்தமான கடைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று நடத்திய அதிரடி சோதனையில் ரூ.5100 கோடி மதிப்பிலான தங்கம், வைரங்கள் மற்றும் விலை உயர்ந்த கற்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. #PNBScam #NiravModi

மாலை மலர்

புதுடெல்லி:

குஜராத்தை சேர்ந்த வைர நகை வியாபாரியான நிரவ் மோடி உலகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் தனது நகை ஷோரூம்களை வைத்துள்ளார். இதற்கிடையே, பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் இருந்து சுமார் 11 ஆயிரத்து 400 கோடி ரூபாய் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக வங்கி சார்பில் சி.பி.ஐ.யிடம் நேற்று இரண்டு புகார்கள் அளிக்கப்பட்டது.

முறையான தகவல்களை அளிக்காமல் 280 கோடி ரூபாய் முறைகேடாக கடன் பெற்றதாக கூறி ஏற்கனவே அவர் மீது கடந்த மாதம் 29-ம் தேதி பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் அளிக்கப்பட்ட புகாரை அடுத்து சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்தது. அதனை தொடர்ந்து, 31-ம் தேதி அவரது நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

நேற்றைய புகாரை அடுத்து தொழிலதிபர் நிரவ் மோடி, சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்தது தொடர்பாக மும்பையில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்க துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தியுள்ளனர். இதற்கிடையே, நீரவ் மோடி கடந்த மாதம் முதல் தேதியில் இந்தியாவை விட்டு தப்பி ஓடிவிட்டார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிரவ் மோடி மட்டுமல்லாமல், அவரது மனைவி, சகோதரர் என இவ்விவகாரத்தில் தொடர்புடைய முக்கிய நபர்கள் நாட்டை விட்டு ஓடிவிட்டதாக அதிகாரிகள் மட்டத்தில் கூறப்படுகிறது. ஆனால், கடந்த மாதம் அவர் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடந்த உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில், நிரவ் மோடிக்கு சொந்தமான 17 கடைகளில் இன்று நடத்தப்பட்ட சோதனையில், ரூ.5100 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வைரங்கள் மற்றும் விலை மதிப்பு மிகுந்த கற்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பறிமாற்ற தடுப்புச்சட்டத்தின் கீழ் மேற்கண்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

வங்கிக்கணக்கில் இருந்த 3.9 கோடி ரூபாய், நிரந்தர வைப்பு நிதியும் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். சோதனையில் பல முக்கிய ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். #NiravModi | #PNBScam | #PNBFraudCase | #TamilNews