செய்திகள்

பண மோசடி வழக்கு: லாலு பிரசாத் மகள், அவரது கணவரின் டெல்லி வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை

பண மோசடி வழக்கு தொடர்பாக, லாலு பிரசாத் மகள் மிசா பார்தி, அவரது கணவரின் டெல்லி வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

புதுடெல்லி:

பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் மகளும், ராஷ்டிர ஜனதா தளம் கட்சியின் எம்.பி-யுமான மிசா பார்தி மீது வருமான வரித்துறையினர் பண மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில், பண மோசடி வழக்கு தொடர்பாக மிசா பார்தி மற்றும் அவரது கணவருக்கு சொந்தமாக புதுடெல்லியில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கப் பிரிவினர் இன்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக, லல்லு பிரசாத் யாதவ்-க்கு சொந்தமான இடங்களில் நேற்று சி.பி.ஐ சோதனை மேற்கொண்டது. சிபிஐ சோதனை பா.ஜ.க.வின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று லாலு பிரசாத் குற்றம்சாட்டி இருந்தார்.

மகள் மிசா பார்தி வீடுகளிலும் சோதனை நடத்தப்படுவது லாலு பிரசாத்துக்கு அரசியல் ரீதியல் அதிக நெருக்கடியை தந்துள்ளதாக கருதப்படுகிறது.

பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கிய லாலு பிரசாத், அதன் மூலம் கிடைத்த சட்டவிரோத சொத்துக்களை மனைவி, மகள்கள், மகன்கள் பெயருக்கு மாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஏற்கனவே சி.பி.ஐ.யும், அமலாக்கப் பிரிவும் லல்லு பிரசாத் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தியது.

இதில் லல்லு பிரசாத்தின் மகள் மிசாபாரதி அவரது கணவர் பெயரில் உள்ள பல கோடி பினாமி சொத்துக்களை ஏற்கனவே அமலாக்கப் பிரிவு முடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.