செய்திகள்

சட்டவிரோத பணபரிவர்த்தனை: லாலுபிரசாத் மகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் லாலு பிரசாத் மகள் மிசாபாரதி, அவரது கணவர் சைலேஷ் குமார் ஆகியோர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

புதுடெல்லி:

பீகார் முன்னாள் முதல்- மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலுபிரசாத் யாதவ் மாட்டு தீவன ஊழல் வழக்கில் சிக்கி இருக்கிறார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் லாலு பிரசாத் ரெயில்வே மந்திரியாக இருந்த போது ஐ.ஆர். டி.சி. ஓட்டல் ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாகவும், இதன் மூலம் கிடைத்த லஞ்ச பணத்தை தனது குடும்பத்தினர் பெயரில் உள்ள நிறுவனங்களுக்கு மாற்றியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. சட்ட விரோத பணபரிவர்த்தனையின் கீழ் டெல்லியில் உள்ள லாலு பிரசாத்தின் மகள் மிசா பாரதிக்கு சொந்தமான பண்ணை வீட்டை அமலாக்கத்துறை முடக்கியது.

இது தொடர்பாக மிசாபாரதி, அவரது கணவர் சைலேஷ்குமார் உள்ளிட்டோர் மீது இந்த வழக்கு டெல்லி சிறப்பு கோர்ட்டு நீதிபதி மல்கோத்ரா முன்னிலையில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. லாலு பிரசாத் மகள் மிசாபாரதி, அவரது கணவர் சைலேஷ் குமார் ஆகியோர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.