புதுடெல்லி:
இமாச்சல பிரதேச முன்னாள் முதல்-மந்திரி வீர்பத்ரசிங். இவர் மத்திய மந்திரியாக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரான வீர்பத்ரசிங் (வயது 82). உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. 2015-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது. இது தொடர்பான வழக்கு டெல்லி பாட்டியாலா ஹவுசில் உள்ள சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது.
சொத்து குவிப்பு வழக்கில் கடந்த வாரம் வீர்பத்ரசிங் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து இருந்தது.
சொத்து குவிப்பு வழக்கில் சி.பி.ஐ. பதிவு செய்த எப்.ஐ.ஆர் படி வீர்பத்ரசிங் உள்ளிட்டோர் மீது சட்ட விரோத பணபரிவர்த்தனை வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்தது.
சட்ட விரோத பணபரிவர்த்தனை சட்டப்படி டெல்லியில் உள்ள அவரது குடும்பத்துக்கு சொந்தமான ரூ.27 கோடி மதிப்புள்ள பண்ணை வீட்டை அமலாக்கத்துறை முடக்கி இருந்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து இருந்தது.
இந்த நிலையில் அமலாக்கத்துறை 2-வது குற்றப்பத்திரிகையை இன்று தாக்கல் செய்தது. டெல்லி சிறப்பு கோர்ட்டு நீதிபதி சந்தோஷ் மேனன் முன்பு தாக்கல் செய்யப்பட்டது.
இதில் வீர்பத்ரசிங், அவரது மனைவி பிரதீபா உள்பட 6 பேரது பெயர்கள் இடம் பெற்று இருந்தது. #Tamilnews