கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி பழைய ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து நவம்பர் 14-ந்தேதி முதல் 19-ந்தேதி முடிய போலியான நிறுவனங்கள் பெயரில் பல்வேறு வங்கிக்கணக்குகளில் ரூ.51 கோடியை டெபாசிட் செய்து பின்னர் அந்த பணத்தை வங்கி அதிகாரிகளின் உதவியுடன் திரும்ப எடுத்ததாக டெல்லியைச் சேர்ந்த பிரபல வக்கீல் ரோகித் தாண்டன் உள்ளிட்ட 3 பேரை மத்திய அமலாக்கத்துறை கைது செய்தது.
இந்த மோசடியில் கூடுதல் ஆதாரங்களை சேகரிப்பதற்காக கடந்த 30-ந்தேதி டெல்லியை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் யோகேஷ் மிட்டலின் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனையும் நடத்தியது. அப்போது வங்கியில் செல்லாத நோட்டுகளை டெபாசிட் செய்த மோசடியில் யோகேஷ் மிட்டலுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.