புதுடெல்லி:
அரசியல்வாதிகள் தீவிரமான குற்றவழக்குகளில் சிறை தண்டனை பெற்றால் அவர்கள் 6 வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டால் உடனடியாக அவர்கள் தங்கள் பதவியை இழந்துவிடுவார்கள் என்ற தேர்தல் கமிஷனின் உத்தரவு தற்போது அமலில் உள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில் பா.ஜனதா தலைவர் அஷ்வினி உபாத்யாய் என்பவர் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நபர் தேர்தலில் போட்டியிடுவதை அனுமதிக்கக் கூடாது. தீவிரமான குற்ற வழக்குகளில் சிறை தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் ஜெ.எம்.லிங்டோ, மக்கள் நல அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனம் ஆகியோர் சார்பிலும் இதேபோன்ற மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டின் கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது. வழக்கின் விசாரணையின் போது, குற்றவழக்குகளில் தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ. உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க தேவையில்லை என்று தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, இதுபோன்ற விவகாரங்களில் சட்டம் இயற்றும் அதிகாரம் மக்கள் பிரதிநிதிகள் வசம் தான் உள்ளது என்று கூறிய சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், தேர்தல் ஆணையம் தெளிவான நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினர்.