ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு கடந்த 7 மாதங்களாக அ.தி.மு.க.வில் அதிரடி மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. ஜெயலலிதாவின் நிழல்போல இருந்த சசிகலா அ.தி.மு.க. பொதுச் செயலாளராகி, முதல்-அமைச்சர் பதவிக்கும் குறி வைத்தார்.
இதன் காரணமாக பதவி விலக நேரிட்ட ஓ.பன்னீர் செல்வம், சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இது அ.தி.மு.க.வில் முதல் பிளவை ஏற்படுத்தியது. தனி அணியாக பிரிந்து சென்ற ஓ.பி.எஸ். பக்கம் 11 எம்.எல்.ஏ.க்கள் அணிவகுத்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சசிகலா, தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை ஒருங்கிணைத்தார். ஆனால் அவரது முதல்-அமைச்சர் கனவு பலிக்கவில்லை. சொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட 4 ஆண்டு சிறை தண்டனை அதற்கு முட்டுக்கட்டை போட்டது.
இருப்பினும், தான் விரும்பும் ஆட்சி அமைய வேண்டும் என்று எண்ணிய அவர் எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சராக தேர்வு செய்ய வைத்தார். தனது அக்காள் மகனான டி.டி.வி. தினகரனை கட்சியின் துணை பொதுச் செயலாளராக்கினார்.
சசிகலா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டவுடன் டி.டி.வி.தினகரன் கட்சியை வழிநடத்தினார். ஆனால் இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதாகி தினகரனும் சிறை செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது. டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்ட அவர் கடந்த மே மாதம் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதன் பின்னர் அ.தி.மு.க.வில் ஒவ்வொரு நாளும் பரபரப்பாக நகர்ந்து வருகிறது.
தினகரனை கட்சியின் துணை பொதுச் செயலாளராக ஏற்றுக்கொள்ள மறுக்கும் அதிருப்தியாளர்கள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு அணியாகவும், தினகரனை ஆதரிப்பவர்கள் மற்றொரு அணியாகவும், ஜெயலலிதாவின் மிகுந்த நம்பிக்கைக்குரிய விசுவாசியாக இருந்துவந்த முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வேறொரு தனி அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா, அ.தி.மு.க.வின் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச் செயலாளர் என்ற முறையில் துணை பொதுச் செயலாளராக தினகரனை நியமித்தது செல்லுபடியாகுமா? என்ற கேள்வி ஒருபக்கம் அக்கட்சியின் அடிப்படை தொண்டர்களை குழப்பி வருகிறது.
இந்த குழப்பத்துக்கு விளக்கம்பெறும் வகையில் சென்னை தி.நகரை சேர்ந்த ஒருவர் அ.தி.மு.க. தலைமையின் தற்போதைய நிலைப்பாடு என்ன? என்று கடந்த 23-6-2017 அன்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் சில கேள்விகளை எழுப்பி இருந்தார்.
இதற்கு விளக்கம் அளிக்க வேண்டிய தலைமை தேர்தல் கமிஷனுக்கு அவரது கேள்விகள் அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக, டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷன் அலுவலகம் கடந்த 11-7-2017 அன்று மனுதாரருக்கு பதில் அனுப்பியுள்ளது.
‘உங்களது (தலைமை தேர்தல் கமிஷன்) அலுவலகத்தில் காணப்படும் பதிவுகளின்படி, அ.தி.மு.க.வின் தற்போதைய பொதுச் செயலாளர் யார்?, அவர் எப்போது அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்? அக்கட்சியின் பொதுச் செயலாளர் யார்? என்பவை உள்ளிட்ட ஐந்து கேள்விகளில் மூன்று கேள்விகளுக்கான பதிலை தலைமை தேர்தல் கமிஷன் அலுவலகம் தெரிவித்துள்ளது.