சென்னை:
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வருகிற 21-ந்தேதி நடைபெற உள்ளது.
தேர்தல் களத்தில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜனதா, நாம் தமிழர் கட்சி, டி.டி.வி.தினகரன் உள்பட 59 பேர் உள்ளனர்.
தேர்தல் பிரசாரத்திற்கு இன்னும் மொத்தம் 11 நாட்களே அவகாசம் உள்ளது. இதனால் ஆர்.கே.நகரில் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் நேற்றே பிரசாரத்தை தொடங்கிவிட்டனர்.
அதுபோல டி.டி.வி.தினகரனும் நேற்று பிரசாரத்தை தொடங்கினார். தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் கடந்த வாரமே வீடு வீடாக சென்று ஆதரவு திரட்ட தொடங்கி விட்டார். வருகிற திங்கட்கிழமை முதல் தி.மு.க. தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.
ஆர்.கே.நகரில் ஓட்டு பதிவு நாள் நெருங்க நெருங்க பணப்பட்டுவாடா நடைபெறலாம் என்ற பேச்சு நிலவுகிறது. கடந்த தடவை ரூ.100 கோடி அளவிற்கு பணம் புழங்கியதால்தான் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்த தடவையும் அந்த மாதிரி பண வினியோகம் நடந்து விடக்கூடாது என்பதில் தலைமை தேர்தல் ஆணையம் உறுதியாக உள்ளது.
இதற்காக தேர்தல் ஆணையம் ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தேர்தல் பிரசாரத்தை இரவு நேரங்களில் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்களின் நடமாட்டத்தை கண்காணிக்க சுமார் 300 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ஆர்.கே.நகரில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுப்பதற்காக மேலும் சில புதிய கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி பிரசாரத்தை மேற்கொள்ளும் வேட்பாளர்கள் தங்களுடன் எத்தனை பேர் வருகிறார்கள் என்ற எண்ணிக்கையை முன்கூட்டியே தெரிவித்து உரிய அனுமதி பெற வேண்டும்.
பிரசாரத்தின் போது அனுமதி பெற்ற எண்ணிக்கையைவிட கூடுதலாக ஆட்கள் அழைத்து வரப்பட்டது தெரியவந்தால் பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட மாட்டாது. அந்த வேட்பாளரின் பிரசாரம் உடனடியாக ரத்து செய்யப்படும்.
ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு உதவும் வகையில் தேர்தல் ஆணையமே பூத் சிலிப் வழங்க முடிவு செய்துள்ளது. வருகிற 12-ந்தேதி முதல் பூத் சிலிப் வழங்கப்படும். தேர்தல் ஆணைய அதிகாரிகளின் மேற்பார்வையில் வீடு வீடாக சென்று பூத் சிலிப் கொடுப்பார்கள்.
அரசியல் கட்சியினர் பூத் சிலிப் வழங்க கூடாது. அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி பூத் சிலிப் வழங்கும் கட்சியினர் கைது செய்யப்படுவார்கள்.
ஆர்.கே.நகரில் பாதுகாப்புக்காக துணை நிலை ராணுவ வீரர்கள் வர உள்ளனர். முதற்கட்டமாக 10 கம்பெனி ராணுவத்தினர் 12-ந்தேதி வர இருக்கிறார்கள்.
பதட்டம் நிறைந்த பகுதிகள் என்று கண்டறியப்பட்டுள்ள இடங்களில் அவர்கள் நிறுத்தப்படுவார்கள். மேலும் ரோந்து பணிகளிலும் துணை நிலை ராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுவார்கள்.
இந்த தகவல்களை தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.