அண்மையில் உத்தரபிரதேசம் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது. ஆனால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்து பா.ஜனதாவை வெற்றிபெற வைத்து விட்டதாக படுதோல்வி கண்ட பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி குற்றம் சாட்டினார். மேலும் ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ் ஆகியவை முன்புபோல வாக்குச் சீட்டு முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. இதையடுத்து இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க தேர்தல் கமிஷன் முடிவு செய்து உள்ளது.
இந்நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
5 மாநில தேர்தலுக்கு பிறகு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு என புகார் கூறப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு எந்திரம் மீது சந்தேகம் எழுப்புபவர்கள் அதை நிரூபிக்கும் வகையில் எந்த ஆதாரமும் சமர்ப்பிக்கவில்லை. நம்பகத்தன்மையை உறுதி செய்ய தேர்தலின் போது ஒப்புகைச்சீட்டு இயந்திரம் பயன்படுத்தப்படும்.
வாக்குப்பதிவு எந்திரத்தில் ஒரு முறை ப்ரோகிராம் செய்தால் சிப் எதுவும் பொருத்த முடியாது. வாக்குப்பதிவு எந்திரங்களில் வைபை சிப் எதுவும் பொருத்தப்படுவதில்லை. தேர்தலின் போது வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாத்து வைக்க கூடுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முழு பாதுகாப்புடன் வாக்குப்பதிவு எந்திரங்களை தயார் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என பகிரங்கமாக அறிவித்துள்ளவர்கள், இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தை அணுகவில்லை.
வாக்குப்பதிவு எந்திரத்தை தயார் செய்பவர்களுக்கு வேட்பாளர்களின் எண் தெரிய வாய்ப்பில்லை. எனவே, தயாரிப்பு நிலையில், முறைகேடு என்பது சாத்தியம் இல்லாத ஒன்றாகும். வெளிநாடுகளில் தயார் செய்யப்படும் வாக்கு எந்திரங்கள் பயன்படுத்தப்படுவதாக ஒரு தவறான தகவலும் கூறப்படுகிறது. அனைத்து இயந்திரங்களும் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. மென்பொருளும் இங்கேயே எழுதப்படுகின்றன.
வரும் ஜூன் 3 ஆம் தேதி முதல் தேசிய மற்றும் மாநில கட்சிகள் வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மையை பரிசோதிக்கலாம். இதற்காக அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு கட்சியும் தலா 3 பேரை நியமித்துக்கொள்ளலாம். மே 26 ஆம் தேதி 5 மணிக்குள் கட்சிகள் இதை உறுதி செய்ய வேண்டும். தேசிய, மாநில கட்சிகள் முன் செயல் விளக்கம் நடைபெறும்.
முறைகேடு செய்ய முடியும் என்பதை காட்ட ஒவ்வொரு கட்சியும், தேர்தல் நடந்த ஏதாவது ஒரு நான்கு பூத்களில் பயன்படுத்திய நான்கு எந்திரங்களை தேர்வு செய்துகொள்ளலாம். ஒவ்வொரு கட்சிக்கும் நான்கு மணி நேரம் ஒதுக்கப்படும். வாக்குப்பதிவு எந்திரம் மீது வாக்காளர்கள் வைத்துள்ள நம்பிக்கையை திரும்ப பெறவும் அதிகப்படுத்தவும் தேர்தல் கமிஷன் இந்த சவாலை விடுக்கிறது.