செய்திகள்

குற்றப் பத்திரிகையில் தினகரன் பெயர் இல்லை: தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் திருப்பம்

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக போலீசார் தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் டிடிவி தினகரன் பெயர் இடம்பெறவில்லை.

மாலை மலர்

புதுடெல்லி:

அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மீது டெல்லி போலீசார் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக வழக்கு பதிவு செய்தனர்.

இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மூலம் தேர்தல் கமி‌ஷன் அதிகாரிக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம் சாட்டப் பட்டது. இது தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் டி.டி.வி. தினகரன் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர், டி.டி.வி. தினகரன் இடையேயான டெலிபோன் உரையாடல் ஆதாரத்தை டெல்லி போலீசாரால் நிரூபிக்க முடியவில்லை. மேலும் லஞ்சம் பெற முயன்ற தேர்தல் கமி‌ஷன் அதிகாரி யார் என்பதையும் தெரிவிக்க முடியவில்லை.

இந்த காரணங்களால் டெல்லி கோர்ட்டு டி.டி.வி. தினகரன் மீதான குற்றச் சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று கூறி அவரை ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து டி.டி.வி. தினகரன் 69 நாட்கள் சிறை வாசத்துக்கு பின்பு ஜெயிலில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பான குற்றப் பத்திரிகையை டெல்லி கோர்ட்டில் போலீசார் இன்று தாக்கல் செய்தனர். அதில் சுகேஷ் சந்திரசேகர் பெயர் இடம் பெற்றுள்ள நிலையில், டி.டி.வி. தினகரன் பெயர் இடம்பெறவில்லை. இது தினகரனுக்கு கிடைத்த நிவாரணமாக கருதப்படுகிறது. இதன் மூலம் வழக்கில் இருந்து தினகரன் விடுவிக்கப்படும் நிலை ஏற்பட்டிருப்பதாகவும் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

எனினும், தினகரன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை முடிவடைந்ததும், அவருக்கு எதிராக துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.