மும்பை:
மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவதை தடுக்கும் வகையில் மத்திய அரசு தடை சட்டம் கொண்டு வந்தபோது அதை எதிர்க்கும் வகையில் சென்னை ஐ.ஐ.டி. கல்லூரி வளாகத்தில் மாட்டுக்கறி திருவிழா நடத்தினார்கள்.
இதேபோல பாராளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல்குரு நினைவு நாள் நிகழ்ச்சிகளை காஷ்மீரில் நடத்தினார்கள். இந்த சம்பவங்களை கண்டிக்கும் வகையில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.
மும்பையில் உள்ள ஆர்.ஏ.போதார் வணிக கல்லூரி வைரவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இதுசம்பந்தமாக கருத்துக்களை கூறினார். அவர் பேசியதாவது:-
மக்கள் மாட்டிறைச்சி சாப்பிட விருப்பம் இருந்தால் சாப்பிட்டுவிட்டு போகட்டும். அதை ஏன் ஆட்களை திரட்டி விழாவாக கொண்டாட வேண்டும். இதேபோலத்தான் முத்த விழா கொண்டாடுகிறார்கள். முத்தமிட விருப்பம் இருந்தால் அதற்கு யாரிடமும் அனுமதி பெற வேண்டுமா? விருப்பம் இருந்தால் செய்துவிட்டு போகட்டும். அதற்கு ஏன் விழா கொண்டாட வேண்டும்.
தீவிரவாதி அப்சல்குருவுக்கு விழா கொண்டாடுகிறார்கள். அவர் பாராளுமன்றத்தையே தகர்க்க முயற்சித்தவர். அவருக்கு விழா கொண்டாடலாமா?
இவ்வாறு அவர் பேசினார். #tamilnews