செய்திகள்

காவிரி பிரச்சினையில் எடப்பாடி இரட்டை வேடம் போடுகிறார்- துரைமுருகன்

காவிரி நீர் பிரச்சனையில் எடப்பாடி பழனிசாமி இரட்டை வேடம் போடுவதாக தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

மாலை மலர்

காட்பாடியில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் எம்.எல்.ஏக்கள் நந்தகுமார், கார்த்திகேயன் மற்றும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஊர்வலம் சென்றனர்.

காட்பாடி ரெயில் நிலையத்திற்கு சென்று சென்னை சென்ற பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரெயில்லை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசுக்கு எதிராக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினர். அவர்களை ரெயில்வே போலீசார் கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர்.

இதையடுத்து ரெயில் நிலையத்துக்கு வெளியே வந்து சித்தூர் மெயின் ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் செய்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு சித்தூர் பஸ் நிறுத்தத்தில் அண்ணா சிலை அருகே திரண்டு போராட்டம் செய்தனர்.

இதையடுத்து காட்பாடி போலீசார் முன்னாள் அமைச்சர் துரைமுருகன், ஏ.பி. நந்தகுமார் எம்.எல்.ஏ., உள்பட சுமார் 300 பேரை கைது செய்தனர். காட்பாடியில் போராட்டம் செய்த முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:-

தமிழகத்தில் பொது பிரச்சினைக்காக போராட்டம் நடக்கிறது. ஆளுங்கட்சி கூட உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரி பிரச்சினையில் எடப்பாடி அரசு இரட்டை வேடம் போடுகிறது. சென்னையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கியில் கடைசி குண்டு வரை சுட்டாலும் எங்கள் போராட்டம் நிற்காது. பாலுக்கு காவல் பூனைக்கு தோழன் என்பது போல மத்திய அரசுக்கு காவலாகவும், எங்களுக்கு பூனையாகவும், எடப்பாடி பழனிச்சாமி இருந்து வருகிறார்.

ஆளுநரை முதலமைச்சர் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் மத்திய அரசு இவர்களுக்கு ஏதாவது ஆணையிட்டிருக்கலாம். அதை கேட்டு விட்டு அடிபணிந்து வந்திருக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

வாலாஜா ரோடு ரெயில் நிலையத்தில் காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் ரெயில் மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பதியில் இருந்து விழுப்புரம் செல்லும் பாசஞ்சர் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினர்.