வேலூர் பாலாற்று வெள்ளத்தை தி.மு.க. முன்னாள் அமைச்சர் துரைமுருகன் பார்வையிட்ட காட்சி. 
செய்திகள்

ஆட்சி மாறியதால் பாலாற்றில் 10 அணைகள் கட்ட முடியவில்லை: துரைமுருகன்

ஆட்சி மாறியதால் பாலாற்றின் குறுக்கே 10 தடுப்பணைகள் கட்ட முடியவில்லை என தி.மு.க. முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

மாலை மலர்

வேலூர்:

வேலூரில் பாலாற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை தி.மு.க. முன்னாள் அமைச்சர் துரைமுருகன் நேரில் பார்வையிட்டார். இதே போன்று காட்பாடி தொகுதிக்குட்பட்ட கவசம்பட்டு, கழிஞ்சூர் ஏரிகளையும் பார்வையிட்டார்.

பின்னர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- பாலாறு பாலம் உடையும் நிலையில் உள்ளது இதை பராமரிக்க டெண்டர் எடுத்தவர்கள் அதை சரியாக பராமரிக்கவில்லை. அதிகாரிகள் கேட்டால் அவர்களும் தகவல் தெரிவிக்கவில்லை. இது அதிகாரிகளின் மெத்தன போக்கை காட்டுகிறது.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அம்மா இட்லி சாப்பிட்டார் என்று கூறியவர் தான் அவர் பொய் சொல்லமாட்டார் டெங்குவால் யாரும் இறக்கவில்லை என்று கூறுகிறார். இந்த ஆட்சி வீட்டிற்கு செல்லும்.

காட்பாடியில் செயல்பட்டு வந்த தமிழ்நாடு அரசு வெடிமருந்து தொழிற்சாலை நஷ்டத்தில் இயங்குவதாக மூடிவிட்டனர். அதனை மத்திய அரசுக்கு நெருக்கமான வடநாட்டு முதலாளி ஒருவருக்கு விற்கப்போகிறார்கள். எனவே அவ்வாறு நடந்தால் மாவட்ட தழுவிய அளவில் அனைவரையும் திரட்டி போராட்டம் நடத்துவேன்.

பாலாற்றில் வெள்ள நீர் வீணாகாமல் இருக்க பாலாறு தமிழகத்தில் தொடங்கும் இடம் முதல் முடியும் இடம்வரை ரூ.1700 கோடி நிதியில் 10 தடுப்பணைகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து திட்டமிட்டோம்.

ஆனால் ஆட்சி மாறியதால் அதனை செயல்படுத்த முடியவில்லை. தற்போது அந்த நிதி எங்கே போனது என்று தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.