சென்னை:
தி.மு.க. இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் இன்று அறிவித்தார்.
இந்நிலையில், தந்தையை போலவே இளைய தலைமுறையினரை ஈர்ப்பார் உதயநிதி ஸ்டாலின் என தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், உதயநிதிக்கு பொறுப்பு வழங்கப்பட்டது எனக்கு மட்டுமல்ல, கட்சியில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தி. அவர் திரைப்பட நடிகர் என்பதால் தனி செல்வாக்கு உள்ளது, அது கட்சிக்கு நிச்சயம் பயன்படும்.
தந்தையை போலவே இளைய தலைமுறையினரை ஈர்ப்பார் உதயநிதி. ஸ்டாலினின் மகன் என்கிற செல்வாக்கை தாண்டி ஆற்றல் மிக்கவர். உதயநிதியின் தேர்தல் பிரசாரங்களை பார்த்து நான் வியந்து போனேன்.
சொல்ல வேண்டிய கருத்தை கேட்பவர்கள் இதயத்தில் பதியும்படி பேசுவார் உதயநிதி. இளைஞர் அணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. திமுகவுக்கு இளைஞர்களை ஈர்ப்பதற்கான அறிவிப்பு இது என தெரிவித்துள்ளார்.
இதேபோல், ஆர்.எஸ்.பாரதி, தங்க தமிழ்ச்செல்வன், வெள்ளக்கோவில் சாமிநாதன், வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.