துலீ்ப் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி கடந்த 7-ந்தேதி முதல் நேற்று வரை நடைபெற்றது. இதில் இந்தியா ரெட் - இந்தியா க்ரீன் அணிகள் மோதின. இந்தியா ரெட் அணிக்கு தினேஷ் கார்த்திக்கும், இந்தியா க்ரீன் அணிக்கு கருண் நாயரும் கேப்டனாக செயல்பட்டனர்.
டாஸ் வென்ற தினேஷ் கார்த்திக் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா ரெட் 323 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் பன்சால் 105 ரன்னும், தினேஷ் கார்த்திக் 50 ரன்னும், சட்டர்ஜீ 52 ரன்னும் சேர்த்தனர். இந்தியா க்ரீன் அணியில் முரளி விஜய் 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
பின்னர் இந்தியா க்ரீன் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. சோப்ரா (65), கருண் நாயர் (37) ஆகியோர் மட்டுமே தாக்குப்பிடித்து விளையாட, மற்றவர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் இந்தியா க்ரீன் 157 ரன்னில் சுருண்டது.
கவுதம் ஐந்து விக்கெட்டும், கரண் சர்மா 4 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். 166 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா ரெட் 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் பன்சால் (133 நாட்அவுட்), கேப்டன் தினேஷ் கார்த்திக் (100 நாட்அவுட்) ஆகியோர் சதம் அடித்தனர். அணியின் ஸ்கோர் 2 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்னாக இருக்கும்போது இந்தியா ரெட் 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
இதனால் இந்தியா க்ரீன் அணிக்கு 474 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா ரெட். 3-வதுநாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்திருந்த இந்தியா க்ரீன், நேற்றைய கடைசி நாளில் நெருக்கடியுடன் களம் இறங்கியது.
இந்தியா க்ரீன் அணி கேப்டன் கருண் நாயர் 120 ரன்கள் அடித்தாலும், அந்த அணியால் 303 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 170 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா ரெட் அணி வெற்றி பெற்றது. கரண் சர்மா 6 விக்கெட்டும், வேகபந்து வீச்சாளர் சித்தார்த் கவுல் நான்கு விக்கெட்டும்வீழ்த்தினர்.
இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த பன்சால் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்தியா ப்ளூ - இநதியா ரெட் அணிகளுக்கு இடையிலான அடுத்த போட்டி கான்பூரில் 13-ந்தேதி தொடங்குகிறது.