கும்பகோணம்:
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஊரணிபுரத்தில் ஆரோக்கியராஜ் என்பவர் வீட்டில் கடந்த 2008-ம் ஆண்டு 6 ஐம்பொன் சிலைகள் இருந்ததை, அருப்புக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த காதர்பாட்சா (57), ஏட்டாக பணியாற்றிய சுப்புராஜ் (48) ஆகியோர் பறிமுதல் செய்து அந்த சிலைகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல், வெளியில் விற்பனை செய்து விட்டனர்.இதுதொடர்பாக தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இருவர் மீதும் வழக்குப் பதிந்து கடந்த செப். 13-ந் தேதி கும்பகோணத்தில் காதர்பாட்சாவை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பான வழக்கு கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது டிஎஸ்பி காதர்பாட்சாவை போலீசார் நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். இதையடுத்து வருகிற 12-ம் தேதி வழக்கை ஒத்தி வைத்தும், அதுவரை நீதிமன்ற காவலில் வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
அப்போது, காதர்பாட்சா தரப்பில் தனக்கு சிறையில் முதல்வகுப்பு வழங்கப்பட வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.