செய்திகள்

திருப்பூர்: குடிபோதையில் அரசு பஸ்சை தாறுமாறாக ஓட்டிய டிரைவர் - 70 பயணிகள் உயிர் தப்பினர்

திருப்பூர் மாவட்டத்தில் அரசு பஸ் டிரைவர், குடிபோதையில் பஸ்சை தாறுமாறாக இயக்கியதில் அதிர்ஷடவசமாக 70 பயணிகள் உயிர் தப்பினர்.

திருப்பூர்:

ஈரோடு சின்ன கிணற்றுப்பாளையத்தை சேர்ந்தவர் சண்முகமூர்த்தி (வயது 43). இவர் திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து சிட்கோ செல்லும் அரசு பஸ் டிரைவராக உள்ளார். இன்று காலை 47.சி. பஸ்சை வழக்கம்போல் சண்முகமூர்த்தி ஓட்டினார்.

சிட்கோ பகுதிக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் ஏராளமானோர் பஸ்சில் இருந்தனர். பஸ்சில் கூட்டம் அதிகமானதால் சில பயணிகள் படிகட்டில் நின்றவாறு பயணம் செய்தனர். பஸ் புறப்பட்டது முதல் வேகமாகவும், தாறுமாறாகவும் ஓடியது. இதனால் முன் பக்கம் இருந்த பெண் பயணிகள் மற்றும் படியில் நின்ற பயணிகள் அவதியடைந்தனர்.

மெதுவாக ஓட்டுமாறு பயணிகள் டிரைவரிடம் கேட்டனர். ஆனால் அதை காதில் வாங்காமல் தொடர்ந்து பஸ்சை தாறுமாறாக ஓட்டினார். இதனால் பயணிகளுக்கும், டிரைவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த டிரைவர் பஸ்சை எங்கும் நிறுத்தாமல் திருப்பூர் ரூரல் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றார்.

போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தியபோது பஸ் டிரைவர் சண்முகமூர்த்தி குடிபோதையில் இருப்பது தெரியவந்தது. விசாரணையில் குடிபோதையில் இருப்பதை டிரைவரும் ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து அவரை போலீஸ் நிலையத்தில் அமர வைத்தனர். பயணிகளை மாற்று பஸ்சில் போலீசார் அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போக்குவரத்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் குடிபோதையில் பஸ்சை ஓட்டிய டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். பஸ்சில் 70-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். விபத்து ஏதும் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.