செய்திகள்

பாப்பாரப்பட்டி அருகே குடிபோதையில் தகராறு: தந்தையை கட்டையால் தாக்கிய மகன் கைது

குடிபோதையில் தகராறு செய்த தந்தையை கட்டையால் தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள கிருஷ்ணன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது 40). விவசாயி. இவரது மனைவி லட்சுமி.

பெரியசாமிக்கு குடிப்பழக்கம் இருந்ததாக தெரிகிறது. அடிக்கடி இவர் குடித்து விட்டு வீட்டில் உள்ளவர்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். நேற்று வழக்கம்போல் குடித்து விட்டு தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரம் அடைந்த அவரது மகன் முனியப்பன் கட்டையால் பெரியசாமியை தாக்கினார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் பாப்பாரப்பட்டி போலீசார் முனியப்பன் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.