தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பொன்னங்குறிச்சியை சேர்ந்தவர் காந்தாரி (வயது 45). இவரின் உறவினர் தூத்துக்குடியை சேர்ந்த பொன்னு (33). இவர்கள் 2 பேரும் கட்டிட தொழிலாளிகள். இவர்கள் உள்பட தொழிலாளிகள் சிலர் தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை பவானி நகரில் கட்டிட வேலையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் கடந்த 12-ந்தேதி இரவு பொன்னு மற்றும் காந்தாரி ஆகியோர் அந்த கட்டிடத்தில் மது குடித்துவிட்டு தூங்கியதாகவும், மறுநாள் காந்தாரி உயிர் இழந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த குமாரகிரி கிராம நிர்வாக அலுவலர் திரேசம்மாள் புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். உடல் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் காந்தாரி அடித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து புதுக்கோட்டை போலீசார், சம்பவத்தன்று காந்தாரியுடன் இருந்த பொன்னுவிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
சம்பவத்தன்று சம்பவ இடத்தில் 2 பேரும் மது அருந்தி உள்ளனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் 2 பேரும் ஒருவரை ஒருவர் அங்கு கிடந்த கம்பால் தாக்கி உள்ளனர். அதில் காந்தாரி உயிரிழந்தது தெரியவந்தது.
இதனையடுத்து காந்தாரி மரணத்தை போலீசார் கொலை வழக்காக பதிந்தனர். அந்த வழக்கில் பொன்னுவை போலீசார் கைது செய்து பேரூரணி கிளை சிறையில் அடைத்தனர்.