செய்திகள்

தக்கலை அருகே மாணவியை கற்பழிக்க முயன்ற டிரைவரின் வீட்டுக்கு தீவைப்பு

தக்கலை அருகே மாணவியை கற்பழிக்க முயன்ற டிரைவரின் வீட்டுக்கு கிராம மக்கள் தீவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மாலை மலர்

தக்கலை:

தக்கலை அருகே உள்ள வயக்கரை பகுதியில் வசிப்பவர் வினு (வயது 26). இவரது சொந்த ஊர் மேக்கா மண்டபத்தை அடுத்த செம்பருத்தி விளையாகும்.

வினு வேன் டிரைவராக உள்ளார். தக்கலை பகுதியில் வேன் ஓட்டி வந்ததால் அதற்கு வசதியாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேக்கா மண்டபத்தை அடுத்த செம் பருத்திவிளை பகுதியில் ஒரு வீட்டை வாங்கி அங்கு தனியாக வசித்து வந்தார்.

இவரது வீடு வழியாக அந்த பகுதியை சேர்ந்த 16 வயதான பிளஸ்-1 மாணவி ஒருவர் பள்ளிக்கூடத்திற்கு நடந்து செல்வார். இதை நோட்டமிட்ட வினுவுக்கு அந்த மாணவி மீது காதல் ஏற்பட்டது.

இதனால் அந்த மாணவியை பல நாட்களாக பின் தொடர்ந்து சென்ற வினு அவரிடம் தனது காதலை தெரிவித்து உள்ளார். ஆனால் அதை ஏற்காத அந்த மாணவி, வினு தனக்கு தொந்தரவு கொடுப்பது பற்றி பெற்றோரிடம் கூறி அழுதார்.

இதனால் அவரது பெற்றோர் ஆத்திரமடைந்தனர். அவர்கள் வினுவை அழைத்து கண்டித்தனர். ஆனாலும் வினு மாணவியை பின்தொடர்வதை கைவிடாமல் இருந்து உள்ளார். இந்த நிலையில் பிளஸ்-1 தேர்வு முடிந்து பள்ளிக்கூடத்திற்கு விடுமுறை விடப்பட்டது.

இதைத்தொடர்ந்து அந்த மாணவி அந்த பகுதியில் உள்ள ஆலயத்திற்கு சென்று வந்தார். இதை நோட்டமிட்ட வாலிபர் வினு தனது வீடு வழியாக மாணவி சென்ற போது மறைந்திருந்து அவரது வாயில் துணியை பொத்தி தனது வீட்டிற்கு கடத்திச் சென்றார். இதனால் பயந்து போன மாணவி கூச்சல் போட்டதால் அவரை கொன்றுவிடுவதாக வினு மிரட்டியதால் மாணவி மயங்கி விழுந்தார்.

இதற்கிடையில் மகளை காணாமல் அவரது பெற்றோர் அந்த வழியாக தேடி வந்தனர். வினுவின் மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக அவரது வீட்டிற்கு சென்று பார்த்த போது அங்கு தங்களது மகள் மயங்கிக் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

வினுவை மடக்கிப்பிடித்து தர்மஅடி கொடுத்தனர். அதற்குள் இந்த தகவல் அறிந்து அங்கு திரண்ட பொதுமக்களும் அவரை சரமாரியாக தாக்கினார்கள். அவர்கள் பிடியில் இருந்து தப்பி வினு ஓட்டம் பிடித்தார். மாணவியை மீட்டு ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

இதுபற்றி கொற்றியோடு போலீசிலும் புகார் செய்யப்பட்டது. இது பெண் சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால் அதுபற்றி குழித்துறை அனைத்து மகளிர் போலீசுக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர்.

மேலும் தப்பியோடிய வேன் டிரைவர் வினுவை கொற்றியோடு போலீசார் தேடத் தொடங்கினார்கள். அப்போது அவர் சொந்த ஊரான வயக்கரையில் பதுங்கி இருப்பது தெரிய வந்ததால் அவரை தேடி அங்கு சென்றனர். அப்போது வினு போலீசுக்கு பயந்து தூக்க மாத்திரையை சாப்பிட்டு அந்த பகுதியில் சாலையோரத்தில் மயங்கிக் கிடந்தார். மேலும் அவரது பேண்ட் பாக்கெட்டில் சில தூக்க மாத்திரைகள் இருந்ததும் தெரியவந்தது.

உடனடியாக அவரை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத் திரியில் அனுமதித்தனர். போலீஸ் விசாரணையில் வினு முதலில் தற்கொலை செய்வதற்காக அந்த பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து உள்ளார். அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதைப் பார்த்து அவரை கண்டித்து அங்கிருந்து விரட்டி உள்ளனர். அதன்பிறகே அவர் தூக்க மாத்திரையை சாப்பிட்டு உள்ளார். தற்போது போலீஸ் பாதுகாப்புடன் வினுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் வினு மாணவியை கடத்தி கற்பழிக்க முயன்றது அந்த பகுதி மக்களை ஆத்திரத்தில் ஆழ்த்தியது. அவர்கள் அவரது வீட்டிற்கு திரண்டு சென்று வீட்டை அடித்து உடைத்தனர். அங்கு இருந்த பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டது. மேலும் வீட்டிற்கும் தீ வைத்தனர். இதுபற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் மாணவியை வினு கடத்திய வழக்கு குழித்துறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. போஸ்கோ சட்டத்தின் கீழ் வினு மீது போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர். அவர் தற்போது சிகிச்சையில் உள்ளதால் சிகிச்சை முடிந்த பிறகு அவர் கைது செய்யப்படுவார்.

இதற்கிடையில் வினுவால் கடத்தப்பட்ட மாணவிக்கு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.