பலி 
செய்திகள்

கோத்தகிரி அருகே 150 அடி பள்ளத்தில் டெம்போ உருண்டு விழுந்து டிரைவர் பலி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே 150 அடி பள்ளத்தில் டெம்போ உருண்டு விழுந்து டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மாலை மலர்

கோத்தகிரி:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கொட்டக் கம்பையை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகன் பாஸ்கரன் (வயது 25). டிரைவர். திருமணமாக வில்லை. இவர் நேற்று இரவு கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு லோடு ஏற்ற டெம்போவை ஓட்டி வந்தார்.

டெம்போ தட்டப்பள்ளம் என்ற இடத்தில் வந்தபோது எதிரே லாரி வந்தது. லாரிக்கு வழிவிட டெம்போவை திருப்பினார். அப்போது டெம்போ நிலைதடுமாறி தடுப்பு சுவரில் வேகமாக மோதியது. இதில் தடுப்பு சுவர் இடிந்து டெம்போ 150 பள்ளத்தில் உருண்டு விழுந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த வழியே வந்த வாகன ஓட்டிகள் இது குறித்து கோத்தகிரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் 150 பள்ளத்தில் இறங்கி சோதனை செய்தபோது இடிபாடுகளில் சிக்கி டிரைவர் பாஸ்கரன் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தார்.

இதனையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 150 அடி பள்ளத்தில் கிடக்கும் டெம்போவை மீட்க முயற்சில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.