செய்திகள்

சென்னைக்கு தண்ணீர் வழங்கும் ஏரிகள் நீர் இல்லாமல் தரிசு நிலமாக மாறியது

சென்னைக்கு தண்ணீர் வழங்கும் சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் முற்றிலும் வறண்டு விட்டன. இதனால் ஏரி முழுவதும் தரிசு நிலமாக காட்சி அளிக்கிறது

மாலை மலர்

சென்னை:

கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் 4 ஏரிகளிலும் நீர் இருப்பு அடியோடு சரிந்தது. ஏரிகளில் இருந்த குறைந்த அளவு தண்ணீரும் குடிநீருக்கு எடுக்கப்பட்டதாலும், கடும் வெயில் காரணமாகவும் ஏரிகள் வேகமாக வறண்டன.

தற்போதைய நிலவரப்படி நான்கு ஏரிகளையும் சேர்த்து வெறும் 23 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. (மொத்தம் 11 ஆயிரத்து 257 மி.கன அடி சேமித்து வைக்கலாம்).

ஏற்கனவே சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் முற்றிலும் வறண்டு விட்டன. இதனால் ஏரி முழுவதும் தரிசு நிலமாக காட்சி அளிக்கிறது.

பூண்டி ஏரியில் மட்டும் 22 மி.கன அடி தண்ணீர் உள்ளது (மொத்த கொள்ளளவு 3231 மி.கன அடி) அந்த தண்ணீர் ஏரியின் ஒரு பகுதியில் குட்டைபோல் தேங்கி கிடக்கிறது. அந்த நீர் சென்னை குடிநீர் தேவைக்காக 12 கன அடி வீதம் பேபி கால்வாய் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.

இதனை இன்னும் 3 நாட்களுக்கு மட்டுமே அனுப்ப முடியும். இதைத் தொடர்ந்து பூண்டி ஏரியில் இருந்தும் தண்ணீர் பெற முடியாது. இதையடுத்து சென்னையின் குடிநீர் ஆதாரமான 4 ஏரிகளும் பூஜ்ஜியமாகும் பரிதாப நிலை ஏற்பட்டு உள்ளது.

ஏரிகள் வறண்டதால் சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. கல்குவாரி நீர் மற்றும் விவசாய கிணற்று நீரே தற்போது சென்னை மக்களுக்கு கைகொடுத்து வருகிறது. தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ஆந்திர மாநிலத்தில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் மற்றும் கேரளாவில் இருந்து தண்ணீரை பெறும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.

இதற்கிடையே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக நேற்று மாலை திடீரென மழை கொட்டியது. 6 மாதத்துக்கு பின்னர் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதனால் குடிநீர் தட்டுப்பாடு நீங்கிவிடாது என்றாலும் கடும் வெப்பத்தால் தவித்து வந்த சென்னை மக்களுக்கு இது ஆறுதல் தரும் மழையாக அமைந்தது.