சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் சுமார் 350 சிறு, குறு குடிநீர் கேன் உற்பத்தி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த உற்பத்தி நிறுவனங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பதாக கூறி சில நிறுவனங்களை அரசு ‘சீல்’ வைத்து மூடியுள்ளது.
இதை கண்டித்தும், மத்திய அரசு குடிநீர் கேன் மீது 18 சதவீதம் சரக்கு சேவை வரி விதித்து இருக்கிறது. இதை கைவிட வலியுறுத்தியும் நேற்று முதல் தனியார் கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக ‘கிரேட்டர்’ தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்க காப்பாளர் முரளி, அமைப்பு செயலாளர் அனந்த நாராயணன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஐ.எஸ்.ஐ. தர சான்றிதழ் பெற்ற குடிநீர் நிறுவனங்கள் நிலத்தடி நீர் எடுக்கக்கூடாது என்று கூறி குடிநீர் நிறுவனங்களை அரசு மூடி ‘சீல்’ வைத்து வருகிறது. இதுவரை மாதவரம், மஞ்சக்குப்பம், வாணியம்பாடி உள்பட பல்வேறு இடங் களில் 33 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். மூடிய நிறுவனங்களை மீண்டும் திறக்க அனுமதி வழங்க வேண்டும்.
குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றான குடிநீருக்காக மட்டும் தான் நிலத்தடி நீரை எடுக்கிறார்கள். இதை அரசு புரிந்துகொள்ள வேண்டும். இதேபோல் நிலத்தடி நீரை உறிஞ்சும் குளிர்பான நிறுவனங்கள், சாராய தொழிற்சாலை நிறுவனங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?. எனவே குடிநீர் கேன் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மீது அரசு நடவடிக்கை எடுப்பதை நிறுத்த வேண்டும்.
அதேபோல், தனியார் பாலுக்கு வரியே விதிக்காத நிலையில், குடிநீர் கேனுக்கு 18 சதவீதம் சரக்கு சேவை வரியை மத்திய அரசு விதித்து இருக்கிறது. இதை நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது. இது கண்டிக்கத்தக்கது. இந்த வரி விதிப்பால் குடிநீர் கேன் விலை ‘கிடு கிடு’வென உயரும்.
2007-ம் ஆண்டில் இருந்து குடிநீர் கேனுக்கு எந்த வரியும் அரசு விதிக்கவில்லை. எனவே குடிநீர் கேன் மீது விதிக்கப்பட்ட சரக்கு சேவை வரி விதிப்பை கைவிட வேண்டும். இதையெல்லாம் கண்டித்து தான் நாங்கள் இன்று (நேற்று) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு இருக்கிறோம்.
குடிநீர் கேன் உற்பத்தி செய்யும் தொழில் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று. எனவே மத்திய-மாநில அரசுகள் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு விரைவில் தீர்வு காண வேண்டும். காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் 275-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபட தொடங்கிவிட்டனர். மீதமுள்ள நிறுவனங்களும் இணைய உள்ளனர்.